கிரிக்கெட் வீரர்களை விலக்குங்கள்- நெஹ்வாலுக்கு வேலை கொடுங்கள்

கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம், பரிசு தொகை, விளம்பரம் மூலம் கோடி கணக்கில் வருமானம் கிடைக்கிறது. இந்த பணமும், புகழும் இளைய தலைமுறையினரை கிரிக்கெட் பக்கம் அதிகளவில் திருப்பி வருகிறது.
இதனால் இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டுக்களை மெல்ல மெல்ல அழித்து வருகின்றன. பணபலம் பொருந்திய இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னால் இயன்ற அளவு மற்ற விளையாட்டுக்களை நசுக்கி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் மோகத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது ஹாக்கி தான். இந்தியாவின் தேசிய விளையாட்டு இது தான் என்பது பலருக்கு மறந்து போய்விட்டது. தற்போது இது கிட்டதட்ட பஞ்சாப் மாநிலத்தின் விளையாட்டாகவே மாறிவிட்டது. மற்ற மாநிலங்களில் ஹாக்கி என்பது பெயரளவுக்கு தான் இருக்கிறது.
இதனால் தான் தொடர்ந்து ஆறு முறை ஒலிம்பிக் ஹாக்கியில் தங்கம் வென்ற இந்திய அணி இம்முறை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் திசைப்பக்கம் கூட திரும்ப முடியாமல் போனது.
டோணி சம்பளத்தை தாமதப்படுத்தும் ஏர் இந்தியா...
விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் கிரிக்கெட் வீரர்களின் பேராசை அடங்கி விடுவதில்லை. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் மூலம் ஏர் இந்தியா உள்பட நாட்டின் முக்கிய வங்கிகள், நிறுவனங்களில் வேலைகளில் சேர்ந்து விடுகின்றனர்.
இவர்களில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ரூ. 6 கோடி பெற்ற டோணி, ரூ. 4.2 கோடி வாங்கிய யுவராஜ், ரூ. 3.5 கோடி வாங்கிய ஆர்பி சிங், ரூ. 3.4 கோடி பெற்ற ஹர்பஜன் ஆகியோரும் அடங்குவர்.
இவர்கள் நான்கு பேர் மற்றும் சுரேஷ் ரெய்னா, ஸ்ரீசாந்த், விவிஎஸ் லட்சுமண், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சந்தீப் சிங், பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக பொருளாதார நெருக்கடி காரணமாக திணறி வரும் ஏர் இந்தியா நிறுவனம் தங்கள் ஊழியர்கள் 31 ஆயிரம் பேருக்கு ஜூலை மாத சம்பளத்தை 15 நாட்கள் தாமதமாக கொடுக்க திட்டமி்ட்டுள்ளது. இதில் டோணி, யுவராஜ் உள்ளிட்டோரும் அடங்குவர். கோடிக்களில் புரளும் இவர்களுக்கு இந்த சம்பளம் சொற்பம் தான்.
இந்நிலையில் அதிக பண வசதி படைத்த டோணி, யுவராஜ் போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இது போன்ற உத்தியேகங்களை வழங்க கூடாது, அப்படியே கொடுக்கப்பட்டாலும் அதை இந்த வீரர்கள் வாங்கி கொள்ளாமல் தானாக விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை மற்ற விளையாட்டுகளின் ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.
இதனால் வறுமையில் வாடும் மற்ற விளையாட்டுக்களை சேர்ந்தவர்கள் பயன்பெறுவர்.
மேலும், விளையாட்டு வீரர்களுக்கு இது போன்ற வேலைகள் வழங்கும் நிறுவனங்கள் அவர்கள் வருமானத்தை தெரிந்து கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (OBC) இருப்பதை போல் கிரிமி லேயர் முறையை கொண்டு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு வேலை தரக்கூடாது என முடிவு செய்ய வேண்டும்.
பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால், செஸ் வீராங்கனை கொனேரு ஹம்பி போன்றவர்களுக்கு இந்திய அரசு நிறுவனங்கள் உரிய அங்கீகாரம் தந்து பதவிகளை வழங்க வேண்டும்.
சர்வதேச அளவில் ஜொலித்து வரும் இவர்களை போன்றவர்களுக்கு தற்போது அரசு உதவ வேண்டியது அவசியம். அதேபோல் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும் போதிய கெளரவம் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு பத்ம விருதுகள் கூட வழங்கப்படாதது கொடுமையான விஷயம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications