ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
சென்சூரியன்: தென் ஆப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையை நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது நினைவிருக்கலாம்.
தற்போது 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆட்டம் துவங்குவதற்கு முன்னரே மழை பெய்ததால் போட்டி 36 ஓவர்களாக மாற்றப்பட்டது.
மழை நின்ற பின்னர் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பேட்டிங் செய்வதை விட பெவிலியன் செல்வதையே அதிகம் விரும்பினார்கள்.
அதன் விளைவு துவக்க ஆட்டக்காரர்களான ஸ்மித் 5 ரன்களும், பர்ச்மென்ட் 19 ரன்களும், சாமுவேல்ஸ் 11 ரன்களும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சந்தர்பால் 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய மார்டன் அதிரடி ஆட்டம் ஆடி 50 பந்துகளில் 41 ரன்களை எடுத்த போது துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகிவிட்டார். பின்னர் சம்மி உறுதியுடன் விளையாடி 51 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். இதில் 3 இமாலய சிக்ஸ்ர்களும், 1 பவுண்டரியும் அடங்கும்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 35.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்களை எடுத்தது. அணியின் 3வது அதிகபட்ச ஸ்கோராக உதிரி ரன்கள் 24 கிடைத்தது.
தென் ஆப்பிரிக்காவின் ஸ்டைன், நீல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷான் பொல்லக், லாஞ்ச்வெல்டிட், மார்கல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 3 விக்கெட்டுகள் ரன் அவுட் மூலம் வீழ்த்தப்பட்டது.
வெற்றிக்கு 176 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவின் துவக்க ஆட்டக்காரர்கள் ஸ்மித் 1 ரன்களும், டீ வில்லியர்ஸ் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகி அதிர்ச்சியை கொடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய டுமினி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 88 பந்துகளில் 79 ரன்களை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா 34 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசின் பவல், எட்வர்ட்ஸ், ராம்பால் மற்றும் பிரேவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
79 ரன்களை எடுத்த டுமினி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications