இலங்கை கிரிக்கெட் அணியின் பாக் பயணம் ரத்து?
கொழும்பு: இந்திய அணி வர மறுத்து விட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வருமாறு அழைக்கப்பட்டுள்ள இலங்கை அணியும், தனது கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்று்பயணம் செய்து ஒரு நாள், டெஸ்ட் மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடவிருந்தது.
ஆனால் மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் போகக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய அணி தனது கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்து விட்டது.
இதையடுத்து இலங்கை அணியை கிரிக்கெட் ஆட வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைத்தது. முன்னாள் கேப்டன் அர்ஜூன ரனதுங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம் இதை ஏற்றுக் கொண்டது.
நமது நட்பு நாடு, அண்டை நாடு என்ற வகையில், இந்தியாவுக்குப் பதில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி பங்கேற்கும் என அறிவித்திருந்தார் ரனதுங்கா.
இந்த நிலையில் ரனதுங்கா நேற்று திடீரென கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார். அவரது தலைமையில் கிரிக்கெட் வாரியம் எடுத்த அனைத்து முடிவுகளும் மறு பரிசீலனை செய்யப்படும் என இலங்கை விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளையாட்டு அமைச்சர் காமினி லோகுகே கூறுகையில், அர்ஜூன ரனதுங்கா எடுத்த அனைத்து முடிவுகளையும் நாங்கள் மறு பரிசீலனை செய்கிறோம். பாகிஸ்தான் பயணம் குறித்து வெளியுறவுத்துறையுடனும் கலந்து பேசுவோம். அதிபர் ராஜபக்சேவுடனும் ஆலோசனை நடத்துவோம் என்றார்.
ஆனால் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சிலர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இயைந்துதான் நாங்கள் செயல்படுகிறோம். பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை இந்தியா எந்த சூழ்நிலையில் ரத்து செய்தது என்பதை நாங்கள் அறிவோம். எனவே கண்டிப்பாக பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இருக்காது என்றனர்.
எனவே பாகிஸ்தானுக்கு, இலங்கை கிரிக்கெட் அணி போவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications