மும்பை: காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருந்த மும்பை அணி கேப்டன் டெண்டுல்கர் சென்னை சூப்பர்கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் முதன்முதலாக ஆடுகிறார்.
இடுப்புப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில வாரங்களாக கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வு எடுத்து வருகிறார் இந்திய முன்னணி வீரர் டெண்டுல்கர்.
உடல்தகுதியை அவர் பெறாததால் தென்னாப்பிரிக்க வீரர் போலாக் மும்பை அணி கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் மும்பை அணி பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெண்டுல்கர் கடந்த 2 நாட்களாக பேட்டிங் பயிற்சி எடுத்து வருகிறார். மே 14ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஆட்டத்தில் அவர் இடம் பெறுவார் என்று நம்புகிறோம். அணியில் டெண்டுல்கர் இடம்பெற்றால் வீரர்களிடையே புதிய உத்வேகம் ஏற்படுவது நிச்சயம். எதிரணிக்கும் இது சவாலை ஏற்படுத்தும்.
இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.