டெல்லி: 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படு தோல்வி அடைந்துள்ள நிலையில் கான்பூரில் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டியிலும் சச்சின் டெண்டுல்கர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்க தொடரில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், சக வீரர்கள் எல்லாம் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த நிலையில், சச்சின் மட்டும் ரசிகர்களை ஏமாற்றினார். அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் 2வது டெஸ்ட் போட்டியில், இடம் பெறவில்லை.
இந்த நிலையில் சச்சினுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை. இதையடுத்து அவர் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், ெசன்னை டெஸ்ட் போட்டியில் சச்சின் காயமடைந்தார். தற்போது அதிலிருந்து அவர் குணமடைந்து வருகிறார். ஆனால் விளையாடும் அளவுக்கு தகுதி பெறவில்லை.
எனவே கான்பூரில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கும் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார். காயத்திலிருந்து முழுமையாக குணமாகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் ஷா.
2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படு தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் சச்சின் 3வது டெஸ்ட்டில் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு நல்ல செய்தியாக இருக்க முடியாது.