முத்தரப்பு கிரிக்கெட்-ஆஸியை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஆஸ்திரேலியாவில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா நாடுகள் பங்கு பெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் துவங்கியது.
இதில் சுற்றுப்போட்டிகளில் விளையாடி முதல் 2 இடத்தை பெற்ற இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 3 இறுதி ஆட்டங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இலங்கை 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சிட்னியில் முதல் இறுதி ஆட்டத்தில் சச்சின், ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந் நிலையில் 2வது இறுதிப் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடந்தது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை எடுத்தது. சச்சின் சிறப்பாக விளையாடி 91 ரன்களும், யுவராஜ் சிங் 38 ரன்களும், கேப்டன் டோணி 36 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியாவின் பிராக்கென், மைக்கேல் கிளார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சைமண்ட்ஸ், ஸ்டூவர்ட் கிளார்க், பிரெட் லீ ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வெற்றிக்கு 259 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கில்கிறிஸ்டும், மேத்யூ ஹைடனும் களமிறங்கினர்.
ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கில்கிறிஸ்ட் 2 ரன்களில் பிரவீன்குமாரின் பந்துவீச்சில் டோணியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 1 ரன்னுடன் பிரவீன்குமாரின் பந்துவீச்சில் யுவராஜ் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் வந்த மைக்கேல் கிளார்க் சிறிது நேரம் நின்று விளையாடினார். அவரும் 17 ரன்களில் பிரவீன்குமார் பந்துவீ்ச்சில் கிளீன் போல்டானார்.
பின்னர் ஆன்ட்ரூ சைமண்ட்ஸ், ஹைடனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். ஹைடன் 55 ரன்களை எடுத்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து சைமண்ட்ஸ் 42 பந்துகளில் ஹர்பஜனின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
ஹூசே, ஹோப்ஸ் இருவரும் சேர்ந்து அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தபோது ஹூசே 44 ரன்கள் எடுத்தபோது
ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பிரட் லீ 7 ரன்களில் பிரவீன்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஹோப்ஸ் ஜோடி சேர்ந்த மிட்செல் ஜான்சன் 8 ரன்களுக்கு ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய பிராக்கென் 1 ரன்னில் இர்பான் பதான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் நின்று விளையாடததால் ஆஸ்திரேலியா 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் சார்பில் புதுமுக பந்துவீச்சாளர் பிரவீன் குமார் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், ஸ்ரீசாந்த், இர்பான் பதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் காமன்வெல்த் பாங்க் கோப்பையை கைப்பற்றியது.
ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் பிரவீன்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆட்டத் தொடர் நாயகன் விருது 10 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் பிராக்கெனுக்கு அளிக்கப்பட்டது.
இந்தப் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்டுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோணி காமன்வெல்த் பாங்க் கோப்பையை பெற்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:21 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications