ஸ்பின்னர்களை பொளந்துகட்டிய கிளாஸன்.. 49 பந்துகளில் அதிரடி சதம்.. ஆர்சிபி அணிக்கு மிரட்டலான இலக்கு!
ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற 187 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றால் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கான பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு உறுதியாகும் என்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின்னர் ஐதராபாத் அணி சார்பாக அபிஷேக் சர்மா - ராகுல் த்ரிப்பாட்டி களமிறங்கினர்.

இதில் பிரேஸ்வெல் வீசிய 5வது ஓவரில் அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், ராகுல் த்ரிப்பாட்டி 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின்னர் ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் - கிளாஸன் கூட்டணி இணைந்தது. இதில் கிளாஸன் தொடக்கம் முதலே அதிரடியாக ஆட, மார்க்ரம் அவருக்குக்கு அதிக ஸ்ட்ரைக்களை வழங்கினார். ஷாபாஸ் அஹ்மத் வீசிய 6வது ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.
பின்னர் ஒவ்வொரு ஓவருக்கு ஒரு பவுண்டரி அல்லது சிக்சரை கிளாஸன் விளாசியதால், ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில் கரண் சர்மா வீசிய 11வத்யு ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக ஆடிய கிளாஸன் 24 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதன்பின்னர் கேப்டன் மார்க்ரமும் அதிரடியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து மார்க்ரம் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் ஹாரி ப்ரூக் - கிளாஸன் கூட்டணி அதிரடியை உச்சத்திற்கு கொண்டு சென்றது. கரண் சர்மா வீசிய 15வது ஓவரில் ஹாரி ப்ரூக் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாச, இன்னொரு பக்கம் கிளாஸன் ஒரு சிக்சரை அடித்து மிரட்டினார். தொடர்ந்து ஷாபாஸ் அஹ்மத் வீசிய ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி கிளாஸன் ருத்ர தாண்டவம் ஆடினார். இதன் காரணமாக 17 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 160 ரன்களை சேர்த்தது.
சிறப்பாக ஆடிய கிளாஸன் ஹர்சல் படேல் ஓவரில் சிக்சரை விளாசி 49 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து 104 ரன்களில் கிளாஸன் ஆட்டமிழந்த நிலையில், 19 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் சேர்த்திருந்தது. பின்னர் சிராஜ் வீசிய கடைசி ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications