இந்த ஆட்டம் போதுமா கண்ணா.. மேலும் 2 ஜம்மு எக்ஸ்பிரஸை களமிறக்கும் ஐதராபாத் அணி.. அசுர பலம்!
ஐதராபாத்: ஐபிஎல் தொடருக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்த முறை மேலும் 2 ஜம்மு எக்ஸிபிரஸுகளை களமிறக்கி மற்ற அணிகளுக்கு தலைவலியை உருவாக்கியுள்ளது. இதனால் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசுர பலம் பெற்று வருகிறது.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த முறை பிராவோ, கெயீரன் பொல்லார்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பலரும் ஓய்வு பெற்று சென்றுவிட்டனர். இதே போல பல இளம் வீரர்கள் கவனத்தை ஈர்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத் அணி
இந்த முறை ஐபிஎல் தொடரில் அதிக பலம் கொண்ட படை எதுவென்று பார்த்தால் ஐதராபாத் அணி முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்தாண்டு ஏலத்தின் போது கேப்டன் வில்லியம்சன் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்களை கழட்டிவிட்டு அதிக தொகையை வைத்திருந்தது. அதை வைத்து எந்தெந்த துறைகள் பலவீனமாக இருந்ததோ, அதற்கெல்லாம் கோடிகளை கொட்டி வீரர்களை எடுத்துள்ளார் காவ்யா மாறன்.

அணியின் விவரம்
அதன்படி பேட்டிங்கில் எய்டன் மர்க்ரம், திரிபாதி, க்ளென் பிலிப்ஸ், ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், அன்மோல்ப்ரீத் சிங், ஹெய்ரிக் க்ளாசன் என பலமாக உள்ளது. மற்றொருபுறம் பவுலிங்கில் புவனேஷ்வர்குமார், நடராஜன், மார்கோ யான்சன், கார்த்திக் தியாகி, வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷித், மார்காண்டே, உம்ரான் மாலிக் என அசுர பலத்தில் உள்ளது.

2 பேர் சேர்ப்பு
இந்நிலையில் கூடுதல் பலம் சேர்க்க உம்ரான் மாலிக்கை போலவே மேலும் 2 பேரை கொண்டு வந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் வாரியத்தை தொடர்பு கொண்டுள்ள ஐதராபாத் நிர்வாகம் 2 பவுலர்களை தங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி முகமது தாஹிர், அகிப் நபி என்ற 2 வேகப்பந்துவீச்சாளர்கள் வலைப்பயிற்சி பவுலர்களாக ஐதராபாத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவருமே நல்ல அனுபவம் கொண்டவர்கள் எனக்கூறப்பட்டுள்ளது.

உம்ரானின் ரெக்கார்ட்
ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் இருந்து அணிக்கு வந்த உம்ரான் மாலிக் இந்திய கிரிக்கெட்டிலேயே புதிய மைல்கல்களை படைத்து வருகிறார். தொடர்ச்சியாக 155+ வேகத்தில் வீசி ஆச்சரியம் கொடுத்தார். குறிப்பாக உம்ரானின் வேகத்தை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதை கடந்த சீசனில் பார்க்க முடிந்தது. இதன் பலனாக தான் உம்ரானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications