இங்கிலாந்தை கதறவிட்ட இலங்கை.. பட்லர் காயத்தால் பின்னடைவு.. குசால் மெண்டிஸ் அதிரடி சதம்!
லீட்ஸ்: லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அசாத்திய த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, கேப்டன் குசால் மெண்டிஸின் அபார சதத்தால் 50 ஓவர்களில் 321 ரன்கள் குவித்தது. அசுர வேகத்தில் ஆடிய குசால் மெண்டிஸ் 12 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 121 ரன்கள் விளாசினார். கமிந்து மெண்டிஸ் 54 ரன்களும், பவன் ரத்நாயக்க 47 ரன்களும் சேர்த்து பலம் தந்தனர்.

இதையடுத்து 322 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாம் பாண்டன் 73 ரன்கள் மற்றும் பென் டக்கெட் 67 ரன்கள் குவித்தனர். அவர்கள்அதிரடி ஆட்டம் ஆடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே 49 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இவர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
மறுமுனையில் ஜோஸ் பட்லர் வெறும் 36 பந்துகளில் அரைசதம் விளாசி இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இங்கிலாந்து 38-வது ஓவரில் 254 ரன்கள் எடுத்திருந்த போது, ரன் ஓடும்போது பட்லருக்கு காலில் பலத்த தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த அவர் பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார்.
கங்காரு படையை சுருட்டிய தென்னாப்பிரிக்கா.. பிரீட்ஸ்கே சதம், கேசவ் மகராஜ் சுழலில் வீழ்ந்த ஆஸ்திரேலியா
வில் ஜேக்ஸ் 52 ரன்கள் எடுத்த போதிலும், இலங்கை வீரர்கள் டெத் ஓவர்களில் துல்லியமாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வேட்டையாடினர். கடைசி நேரத்தில் வலியோடு மீண்டும் களமிறங்கிய பட்லர் உடனடியாக ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் செப்டம்பர் 27 அன்று ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.


Click it and Unblock the Notifications
