பும்ராவை பத்திரமா பார்த்துக்குங்க.. இனி அவரை போல் வீரர் கிடைக்கமாட்டார்.. இலங்கை ஹாட்ரிக் நாயகன் பேச்சு
கொழும்பு: ஜஸ்ப்ரீத் பும்ராவின் திறமையை வாசிம் அக்ரமின் உச்சகாலத்துடன் ஒப்பிட்டு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஃபர்வீஸ் மஹரூஃப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர் பல ஆண்டுகளாக எவ்வாறு தொடர்ந்து முன்னேறி வந்துள்ளார் என்பதையும் அவர் பேசினார்.
பும்ரா இந்தியாவுக்கு அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளராக உருவாகியுள்ளார், ஆனால் இது அவரது உடலில் அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதை கையாள்வது கடினம் என்று ஃபர்வீஸ் மஹரூஃப் கூறினார்.

2010 ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்ததற்கு புகழ்பெற்ற மஹரூஃப், பும்ரா இனி ஒரு ஒற்றைத் திறமை மட்டுமே உள்ளவர் இல்லை என்று நினைவு கூறினார். இது குறித்து பேசிய அவர், 2013 அல்லது 2014இல் சாம்பியன்ஸ் லீக்கில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு எதிராக விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது.
அப்போது அவரைப் பற்றி நான் அறிந்தவை மற்றும் இப்போது நான் பார்ப்பது ஆகியவற்றுக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. முன்பு அவர், உதாரணமாக, வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு இன்ஸ்விங் பந்துவீச்சாளராக மட்டுமே இருந்த நாட்கள் மறைந்துவிட்டன.
இப்போது, அவர் திறமையான அவுட்ஸ்விங்கையும் உருவாக்கியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள 90% பேட்ஸ்மேன்களிடம், இந்தியாவைத் தவிர, எந்த வகை கிரிக்கெட்டில் எதிர்கொள்ள மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என்று கேட்டால், அவர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா என்று கூறுவார்கள். இது வாசிம் அக்ரமின் உச்சகாலத்தில் இருந்ததைப் போன்றது."
"அவர் அற்புதமாக செயல்பட்டுள்ளார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, முதுகு பிரச்சினைகள் காரணமாக அவர் அடிக்கடி காயமடைகிறார். நானே ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்தவன் என்பதால், அவர் எதை அனுபவிக்கிறார் என்பது எனக்கு புரிகிறது. இனி வரும் காலங்களில் அவரது பணிச்சுமையை கவனமாக நிர்வகிக்க வேண்டியது அவருக்கும், பிசிசிஐக்கும் முக்கியம்."
"ஏனெனில் ஜஸ்ப்ரீத் பும்ரா ஒரு தனித்துவமான வீரர். இதுபோன்ற வீரர்கள் அமைப்பில் அடிக்கடி வருவதில்லை, எனவே அவர் இருக்கும்போது, அவரது சர்வதேச வாழ்க்கையை அதிகபட்சமாக பயன்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு முறையும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசும்போது, அவரது உடல் எடையை விட மூன்று மடங்கு அழுத்தம் உடலில் செல்கிறது. இது முதுகு, முழங்கால்கள், கணுக்கால்கள், எல்லாவற்றிலும் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது," என்று மகரூஃப் கூறினார்.


Click it and Unblock the Notifications