மும்பை: ரோகித் சர்மாவின் இந்திய அணியின் எதிர்காலம் என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது 38 வயதாகும் நிலையில், அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிவில் அவர் தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், ரோகித் சர்மா இனியும் இந்திய அணியின் கேப்டனாக விளையாடுவது பற்றியும், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் அதிரடி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். ரோகித் சர்மா தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், ஒரு தேசிய அணியின் கேப்டனாக இருப்பவர் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மனநிலையிலோ, ஓய்வெடுக்கும் மனநிலையில் இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்மும் தற்போது மோசமாக உள்ளது. கடந்த ஓராண்டாகவே அவர் டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக விளையாடி வருகிறார். சமீபத்தில் விளையாடிய டெஸ்ட் தொடர்களில் அவர் மோசமான ஸ்கோர்களை எடுத்தார்.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு தொடரில் அவர் மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டு, ஐந்தாவது போட்டியில் இருந்து அவராகவே அணியில் இருந்து விலகினார். இந்த சூழ்நிலையில், அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ரோகித் சர்மாவே கேப்டனாக இருப்பார் என்ற செய்திகள் வெளியாகின்றன.
இந்த நிலையில் தான் ஸ்டீவ் வாக் இது குறித்துப் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், "இது குறித்து முடிவு எடுப்பது ரோகித் சர்மாவின் கையில் தான் உள்ளது. அவர்தான் இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியும். அவர் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர், நான் இந்திய அணியின் கேப்டனாகவும், இந்தியாவுக்காக விளையாடவும் வேண்டுமா? நான் அதற்கான அர்ப்பணிப்பை அளிக்க தயாராக இருக்கிறேனா? அதற்கான போதுமான நேரம் மற்றும் முயற்சிகளைச் செலுத்துகிறனா? என கேள்விகளைக் கேட்க வேண்டும். உங்கள் நாட்டுக்காக விளையாடுவது என்பது கௌரவம் மற்றும் மரியாதையாகும். உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது, நீங்கள் வெற்றி பெற்றுவிட்ட மனநிறைவுடனும், ஓய்வெடுக்கும் மனநிலையில் இருக்க முடியாது" என்று கூறி இருக்கிறார்.