மும்பை: ரோகித் சர்மாவுக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு இனி எப்போதும் கேப்டன் பதவி அளிக்கப்படாது என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து செய்தி வெளியாகியிருக்கிறது.
ஆனால், அதை சுனில் கவாஸ்கர் விமர்சித்திருக்கிறார். ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பதவியை வழங்கினால் அது அவருக்கு நன்மையைத்தான் செய்யும். அவரை கேப்டனாக்காமல் இருப்பதற்காகச் சொல்லப்படும் காரணங்களில் எந்த நியாயமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஜஸ்பிரித் பும்ரா வேகப்பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், அவரது உடல் தகுதியை சமாளிக்கும் வகையில் சில போட்டிகளில் அவருக்கு ஓய்வளிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதையும் பிசிசிஐ தேர்வு குழு சுட்டிக்காட்டி இருக்கிறது.

ஆனால், ஜஸ்பிரித் பும்ராவிடமே கேப்டன் பதவி அளித்தால், அவர் தனது உடல் தகுதியைக் கருத்தில் கொண்டு எத்தனை ஓவர்கள் வீச வேண்டும் என்பதை அவரே முடிவு செய்து கொள்வார். வேறு ஒரு கேப்டனை நியமித்தால், ஜஸ்பிரித் பும்ரா நிச்சயம் சில ஓவர்கள் அதிகமாகவே பந்துவீச நேரிடும் என சுனில் கவாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு நீண்ட டெஸ்ட் தொடரின் இடையே சில நாட்கள் ஓய்வு பெறுவதற்கான அவகாசம் உள்ளது. அதை ஜஸ்பிரித் பும்ரா பயன்படுத்திக் கொள்வார். எனவே அவருக்கு தொடர்களுக்கு இடையே அல்லது போட்டிகளுக்கு இடையே ஓய்வு அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை என விளக்கியிருக்கிறார்.
இது பற்றி சுனில் கவாஸ்கர் கூறியதாவது: "ஒருவர் தனது பணிச்சுமையைப் பற்றி தானே அதிகம் அறிந்து கொள்வாரா? அல்லது வேறு ஒருவர் அதை சிறப்பாக அறிந்து கொள்ள முடியுமா? நீங்கள் வேறு ஒருவரை கேப்டனாக நியமித்தால், நிச்சயமாக கூடுதலாக ஓவர்கள் வீச வேண்டிய நிலை ஏற்படும். ஜஸ்பிரித் பும்ரா தான் நம்பர் ஒன் பவுலர் என்றால், அவருக்கு எப்போது பந்துவீசுவதை நிறுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்கும்."
"'என்னைக் கேட்டால், ஜஸ்பிரித் பும்ராவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும். அவரது பணிச்சுமையைப் பற்றி பல்வேறு விவாதங்கள் நடந்து வருவது எனக்குத் தெரியும். ஆனால், கேப்டன் பதவியை அவரிடம் அளியுங்கள். அவர் எத்தனை ஓவர்கள் வீச வேண்டும், எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பது அவருக்கே தெரியும். அதுதான் சிறந்த விஷயமாக இருக்கும். ஜஸ்பிரித் பும்ரா எந்த டெஸ்ட் போட்டியிலும் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. அவரது உடல் எப்போது மோசமடைகிறது என்பது அவருக்குத் தெரியும். அவரே தற்போது அதை சொல்வார்".
"இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்குப் பிறகு எட்டு நாட்கள் இடைவெளி உள்ளது. அடுத்து இரண்டு போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. அதன் பிறகு மற்றொரு இடைவெளி உள்ளது. அவரிடம் கேப்டன்சியை அளித்தால், தான் எப்போது பந்துவீச வேண்டும் என்பதை அறிந்த சிறந்த கேப்டனாக அவர் இருப்பார்." இவ்வாறு சுனில் கவாஸ்கர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.