“ஓ நீங்க அப்படி வரீங்களா??..டி20 அணியில் சீனியர்களின் புறக்கணிப்பு.. கவாஸ்கர் கூறிய சுவாரஸ்ய காரணம்!
மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கு கவாஸ்கர் கூறியுள்ள வித்தியாசமான காரணம் கவனம் பெற்றுள்ளது.
இலங்கை அணியுடனான இரண்டு தொடர்களையும் வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளது.
இந்த தொடர்களுக்கான அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த முறையும் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் இளம் படை உருவாக்கப்பட்டுள்ளது.

சீனியர்களின் புறக்கணிப்பு
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் டி20 அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். நியூசிலாந்து மற்றும் இலங்கை தொடரில் வாய்ப்பு பெறாத அவர்கள், அடுத்ததாக வரவுள்ள நியூசிலாந்து தொடரிலும் இடம்பெறவில்லை. இனி டி20 திட்டத்திலேயே அவர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.

ரோகித் விளக்கம்
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்காக இளம் வீரர்களை உருவாக்கவும், 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பைக்காகவும் சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்று வருவதாக பிசிசிஐ சார்பில் கூறப்படுகிறது. கேப்டன் ரோகித் சர்மாவோ, நிச்சயம் டி20 அணிக்கு திரும்பவும் வருவோம், பணிச்சுமைக்காக தற்போது விளையாடாமல் இருக்கோம் என விளக்கம் அளித்திருந்தார்.

சுனில் கவாஸ்கர் பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து கவாஸ்கர் பேசியுள்ளார். அதில், புதிதாக வந்துள்ள தேர்வுக்குழு கமிட்டி 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் அதற்காக கோலி, ரோகித் இனி ஆடவே மாட்டார்கள் என்று அர்த்தம் அல்ல. 2023ம் ஆண்டு முழுவதும் நல்ல ஃபார்மில் இருந்தால் நிச்சயம் டி20 அணியில் இருப்பார்கள்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்
மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. விரைவில் ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டும் அல்லது சமன் செய்தால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும். எனவே அதில் கவனம் செலுத்துவதற்காக சீனியர் வீரர்களுக்கு முடிந்தவரை ஓய்வு கொடுக்கப்படுவதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications