பெங்களூரு : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் வெகுவாக பாராட்டி இருக்கிறார். ஐபிஎல் தொடரின் இன்றைய முக்கிய ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூரை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்காக இரு அணிகளும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தோனி, சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார்.கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சென்னை அணி வெற்றிக்கு அருகே வரை வந்தது.

இந்த நிலையில் தோனியை பாராட்டி சுனில் கவாஸ்கர் பேசியதை தற்போது பார்க்கலாம்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கடியான சூழலில் இருந்து எப்படி வெளியே வருவது என்று நன்றாகவே தெரியும். இதற்கு முழு காரணம் தோனியின் கேப்டன்சி தான். 200 போட்டிகளில் ஒரு அணியை தலைமை தாங்குவது என்பது சாதாரண பணி கிடையாது.
இவ்வளவு போட்டிகளில் அணியை வழிநடத்தும் போது அது நிச்சயம் நமது செயல்பாட்டை பாதிக்கும். ஆனால் தோனி வித்தியாசமானவர். அவருடைய கேப்டன்ஷிப் செயல்பாடு மிகவும் வித்தியாசமாக இருக்கும். தோனி போல் இதுவரை எந்த கேப்டனும் இருந்ததில்லை. இனி எதிர்காலத்தில் யாரும் தோனி போல் வரப்போவதும் கிடையாது என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

41 வயதான தோனி தற்போது மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். காயத்தையும் மீறி அணிக்காக தோனி விளையாடுகிறார். தோனியின் காயம் குறித்து பேசிய மைக்கில் ஹஸி, தோனி மூட்டு வலியால் அவதிப்படுவது உண்மைதான்.எனினும் அவருக்கு காயம் பொறுத்துக் கொள்ளும் அளவில் தான் இருக்கிறது.
இதனால் தற்போது பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார். புள்ளி பட்டியலில் சென்னை அணி தற்போது ஆறாவது இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் சிஎஸ்கே அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.