
முற்றிலும் மோசம்
இப்போட்டியில் புஜாராவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் அல்லது மாயங்க் அகர்வால் அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாத ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அணியின் எந்தவிதம் மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார் ராகுல். ஒன் டவுன் இறங்கி 9 பந்துகளை சந்தித்த புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கில் புஜாரா கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட்டோடு சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனிடம் 7வது முறையாக அவுட்டாகி வெளியேறி இருக்கிறார் விராட் கோலி.

ஒரு சதம் கூட இல்லை
சர்வதேச கிரிக்கெட்டில் 3 இலக்க ரன்களை எட்ட முடியாமல்.. அதாவது சதம் அடிக்க முடியாமல், விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50வது போட்டி இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக 18 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக 50 போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார். இன்று டாஸ் வென்ற பிறகு பேட்டியளித்த கோலி. "எனது பேட்டிங்கை இன்னும் மேம்படுத்தி, அணிக்குள் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன். நான் எனது செயல்முறையை நம்புகிறேன், சில நேரங்களில் அது களத்தில் சரியாக செயல்படாமல் போய்விடும், ஆனால் அணியின் செயல்திறனில் நான் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறேன் என்பதில் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன். அக்கறையாகவும் இருக்கிறேன்" என்று கூறியிருந்தார். ஆனால், எந்தவித ஃபூட் ஒர்க்கும் இல்லாமல் கோலி அவுட்டாகி வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கவலை தருகிறது
இந்நிலையில், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இப்படி தடுமாறுவதில் இருந்து மீள்வதற்கு ஒரு அற்புதமான ஐடியா ஒன்றை கொடுத்திருக்கிறார் மூத்த இந்திய வீரர் சுனில் கவாஸ்கர். இதுகுறித்து அவர் கூறுகையில், "கோலி உடனடியாக சச்சின் ரமேஷ் டெண்டுல்கரை தொடர்பு கொண்டு, 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்க வேண்டும். சிட்னியில் சச்சின் டெண்டுல்கர் செய்ததை இப்போது விராட் கோலி செய்ய வேண்டும். நான் கவர் டிரைவ் விளையாடப் போவதில்லை என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்ள வேண்டும். இது எனக்கு கொஞ்சம் கவலையாக இருக்கிறது, ஏனென்றால் அவர் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது ஸ்டம்பிற்கு செல்லும் பந்துகளை தொட்டு அவுட்டாகிறார். 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, அவர் ஆஃப்-ஸ்டம்பைச் சுற்றித் தான் அதிகம் அவுட்டானார்" என்று கூறியுள்ளார்.

சிட்னியில் நடந்தது என்ன?
சச்சினின் சிறந்த ஃபேவரைட் ஷாட் கவர் டிரைவ் ஷாட் தான். இது உலகத்துக்கே தெரியும். ஆனால், 2003-04 ஆண்டு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சச்சின் டெண்டுல்கர் இந்த கவர் டிரைவ் ஷாட்ஸ்களை விளையாடிய போது, தொடர்ந்து விரைவில் அவுட்டாகி வெளியேறினார். இந்த சூழலில் தான், சிட்னியில் இரு அணிகளும் மோதின. அதில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அடித்த ஸ்கோர் எவ்வளவு தெரியுமா? 705-7. நம்ப முடிகிறதா? அதில் சச்சின் டெண்டுல்கர் அடித்த ரன்கள் 241. நாட் அவுட். அந்த இன்னிங்ஸில் மொத்தம் 436 பந்துகளை எதிர்கொண்ட சச்சின், தனக்கு பிடித்த ஒரு கவர் டிரைவ் ஷாட் கூட அடிக்கவில்லை. அதைத் தவிர, மற்ற அனைத்து ஷாட்ஸ்களையும் விளையாடினார். ஆனால், மறந்தும் கூட கவர் டிரைவ் விளையாடவில்லை. இப்போது, விராட் கோலி மீண்டும் அதே பிரச்னையை தான் சந்தித்து வருகிறார். அவர் கவர் டிரைவ் ஷாட்ஸ்களை அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தான், சச்சினுக்கு உடனே கோலி பேச வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications