மும்பை: 2008ம் ஆண்டு, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு செலுத்திய மரியாதையை நாம் மறந்துவிடக் கூடாது என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, மான்சஸ்டரில் நேற்ற (செப்.10) தொடங்கவிருந்தது.
இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பிற்கு இருந்தது

ஆனால், இந்திய அணி நிர்வாகிகள் மத்தியில் பரவிய கொரோனா தொற்று காரணமாக, கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா மறுத்துவிட்டது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியை அட்லீஸ்ட் டிரா செய்தால் கூட, இந்தியா 2-1 என்று கோப்பையை கைப்பற்றி இருக்கும். ஆனால், இந்த அருமையான வாய்ப்பு கொரோனா காரணமாக கைநழுவிப் போனது. முன்னதாக, லண்டன் ஓவலில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியின் போது அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசியோதெரஃபிஸ்ட் நிதின் பட்டேலும் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரஃபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் இந்திய வீரர்கள் நெருங்கி பணியாற்றியதால், இந்திய அணியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் வீரர்கள் யாருமே பயிற்சியில் ஈடுபடவில்லை. பயிற்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது. இறுதியில் 5 வது டெஸ்ட் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முதலில் அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், "5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் இருக்கும் என்பதை அறிகிறோம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தது. இதன் பிறகு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) இணைந்து மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 5 வது டெஸ்ட் போட்டியை நிறுத்த முடிவு செய்துள்ளது. BCCI மற்றும் ECB இந்த கடைசி டெஸ்ட் போட்டியை எப்படியாவது நடத்த பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருப்பினும், இந்திய அணி நிர்வாகத்தில் கோவிட் -19 பரவுவதால், இந்த டெஸ்ட் போட்டியை நிறுத்தும் முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். பிசிசிஐ மற்றும் இசிபி இடையே உள்ள வலுவான உறவின் காரணமாக, ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டியை வேறு தேதியில் நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரியங்களும் இந்த டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்த ஒரு சரியான நேரத்தை கண்டறியும்." என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மான்செஸ்டரில் ரத்து செய்யப்பட்ட 5 வது டெஸ்டை மீண்டும் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டிருக்கும் முயற்சியை முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் வரவேற்றுள்ளார். அதுமட்டுமின்றி, 2008ம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இங்கிலாந்து மீண்டும் காட்டிய அன்பை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "ரத்து செய்யப்பட்ட இந்த 5வது டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்துவது சரியான விஷயமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில், 2008ம் ஆண்டு நடந்த 26/11 என்ற பயங்கர தாக்குதலுக்குப் பிறகு இங்கிலாந்து அணி என்ன செய்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த போது, தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட, அவர்கள் 2 போட்டிகள் மீதமிருக்க அவசர அவசரமாக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றனர். ஆனால், அடுத்த இரண்டே மாதத்தில் மீண்டும் இந்தியா திரும்பி வந்தனர் அந்த தொடரை நிறைவு செய்தனர். ஒருநாள் போட்டிக்கு பதிலாக, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவர்கள் விளையாடினார்கள்.
இங்கிலாந்து அணி நினைத்திருந்தால், 'நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. நாங்கள் திரும்பி வரவில்லை' என்று சொல்வதற்கான எல்லா தகுதியும் அவர்களிடம் இருந்தது. அப்போது, கெவின் பீட்டர்சன் அணியை வழிநடத்தினார் என்பதை மறந்துவிடாதீர்கள், அவர்தான் இங்கிலாந்து திரும்பி இந்தியா வர முக்கிய காரணமாக இருந்தார். அவர் நினைத்திருந்தால், 'இந்தியா செல்ல நாங்கள் விரும்பவில்லை' என்று கூறியிருக்கலாம். பீட்டர்சன் தான் மற்ற வீரர்களை சமாதானம் செய்து, தைரியம் கொடுத்து அழைத்து வந்தார். அதனால், சென்னையில் நமக்கு ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி கிடைத்தது. அங்கு கடைசி நாளில் இந்தியா 380 ரன்கள் எடுத்து மெகா வெற்றிப் பெற்றது. மறந்துவிடாதீர்கள், இங்கிலாந்து வாரியத்தின் இந்த செயல்பாட்டை நாம் மறந்து விடக் கூடாது" என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.