'கோலியை ஓரங்கட்டுங்க.. அடுத்த 2 உலக கோப்பைக்கு இவர்தான் பெஸ்ட்..' சுனில் கவாஸ்கர் சப்போர்ட் யாருக்கு
துபாய்: ஓர் ஆண்டு இடைவெளியில் 2 டி20 உலகக் கோப்பை தொடர் இருப்பதால் அடிக்கடி கேப்டன்களை மாற்ற முடியாது என்று குறிப்பிட்டுள்ள சுனில் கவாஸ்கர், இப்போதே ரோஹித் சர்மாவை கேப்டனாக அறிவிக்க வேண்டும் என்றும் அடுத்த 2 உலகக் கோப்பை தொடருக்கு ரோஹித் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் முடிந்து சில நாட்கள் இடைவெளியில் டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பையுடன் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
டி20 கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அடுத்து தற்போது துணை கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுனில் கவாஸ்கர் பேச்சு
இருப்பினும், அடுத்த ஆண்டு மீண்டும் ஒரு டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், இப்போதே ரோஹித் சர்மாவை கேப்டனாக அறிவிக்க வேண்டும் என்றும் அடுத்த 2 உலகக் கோப்பை தொடருக்கு ரோஹித் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்த வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "டி20 உலகக் கோப்பை பேக் டு பேக் நடைபெறுகிறது. ஒரு டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு மாதத்தில் தொடங்குகிறது. அதேபோல மற்றொரு டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. எனவே இந்த குறிப்பிட்ட நேரத்தில் கேப்டன்களை தொடர்ந்து நாம் மாற்றக் கூடாது.

டி 20 உலகக் கோப்பை
என்னைக் கேட்டால் இந்த இரண்டு டி 20 உலகக் கோப்பை தொடருக்கும் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரோஹித் சர்மா தான் சிறந்தவராக இருப்பார். அதேநேரம் துணை கேப்டன் பதவிக்கு கேஎல் ராகுலை நியமிக்கலாம். ஏனெனில் அவர் தற்போது பஞ்சாப் அணியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவரால் நீண்டகாலம் கேப்டன் பதவியைச் செய்ய முடியும். ரிஷப் பந்தும் கூட துணை கேப்டனுக்கு சிறந்த ஒரு தேர்வாக இருப்பார்.

டெல்லி அணி
ஏனென்றால் அவர் இப்போதே பல்வேறு முக்கிய வீரர்களை உள்ளடக்கிய டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். டி 20 கிரிக்கெட்டிற்கு ஏற்ப நார்ட்ஜே மற்றும் ரபாடா என பவுலிங்கில் புத்திசாலித்தனமாக மாற்றங்களை அவர் கொண்டு வருகிறார். இப்போது இருக்கும் சூழலில் ஆட்டத்தின் போக்கை கணித்து வேகமாக மாற்றத்தைக் கொண்டு வரும் நபர்களே நமக்குத் தேவை" என்று அவர் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடர்
ஐக்கிய அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 8 வெற்றிகளுடன் சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது. டெல்லி அணியும் 8 வெற்றிகளைப் பெற்றுள்ள போதிலும் நெட் ரன்ரேட் காரணமாக டெல்லி 2ஆம் இடத்தில் உள்ளது. அதேபோல ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கியுள்ள நடப்பு சாம்பியனான மும்பை அணி 5 வெற்றிகளுடன் 5ஆம் இடத்தில் உள்ளது. ராகுல் வழிநடத்தும் பஞ்சாப் அணி 4 வெற்றிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு 4ஆவது இடத்தில் இருந்து தகுதி பெறக் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications