Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஐபிஎல் கோப்பை வெல்ல எந்த எல்லைக்கும் போவோம்".. முகமது ஷமியை கழற்றிவிட சன்ரைசர்ஸ் முடிவு?

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி உரிமையாளர் காவ்யா மாறன், வரும் 2026ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற வெறியுடன், சில இரக்கமற்ற முடிவுகளை எடுக்கத் தயாராகிவிட்டதாக வெளியாகி உள்ள தகவல், அந்த அணி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை அணியிலிருந்து நீக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2016-ல் டேவிட் வார்னர் தலைமையில் கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, அதன் பின் கோப்பை வெல்வது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. 2024 ஐபிஎல் தொடரில் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்ற கேப்டன் பாட் கம்மின்ஸை பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது சன்ரைசர்ஸ். அந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

2025 ஐபிஎல் தொடரில் ஒரு பலம் வாய்ந்த அணியைக் கொண்டிருந்தும், தொடரின் முதல் பாதியில் படுமோசமாகச் செயல்பட்டு, புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தையே பிடித்தது. தொடர் ஏமாற்றங்களால் கடும் கோபத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர்கள், கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி நிர்வாகத்திற்கு ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

"இந்த ஐபிஎல் சீசனைப் பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் அணி தாக்குதல் மனப்பான்மையில் உள்ளது. இந்த முறை கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற செய்தி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பாட் கம்மின்ஸின் கீழ் தற்போதைய அணி கட்டமைப்பிற்கு அவர்கள் அதிக முதலீடு செய்துள்ளதாக உணர்கிறார்கள்" என இது பற்றி சாஹில் மல்ஹோத்ரா என்ற கிரிக்கெட் விமர்சகர் கூறியுள்ளார்.

Sunrisers Hyderabad Issued a Warning to Pat Cummins SRH Owners Eyeing Mohammed Shami s Release

இரக்கமற்ற முடிவுகள்: ஷமிக்கு கல்தா?

"வெற்றி என்று வந்துவிட்டால், உரிமையாளர்கள் இரக்கமற்றவர்கள். மினி ஏலத்திற்கு முன்பு, என்னென்ன மாற்றங்கள் தேவையோ, அவற்றைச் செய்யுங்கள் என்று தெளிவான செய்தியை அவர்கள் வழங்கிவிட்டார்கள்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த அதிரடி மாற்றங்களின் முதல் பலிகடா, முகமது ஷமியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ₹10 கோடி என்ற பெரும் தொகைக்கு வாங்கப்பட்ட ஷமி, கடந்த சீசனில் தனது மோசமான செயல்பாட்டாலும், உடற்தகுதிப் பிரச்சினைகளாலும் அணி நிர்வாகத்தின் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்.

ஷமியின் டி20 வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

சர்வதேச கிரிக்கெட்டில் 400-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் உலகக் கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிகளில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர் ஷமி. ஆனால், அவரது தொடர் காயங்கள், அவரது ஐபிஎல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சீசனில், பெரும்பாலான போட்டிகளில் அவர் பங்கேற்காததும், பங்கேற்ற போட்டிகளில் அவரது எகானமி ரேட் மிக மோசமாக இருந்ததும், சன்ரைசர்ஸ் அணி மட்டுமல்ல, மற்ற அணிகளும் அவரை ஏலத்தில் எடுக்கத் தயங்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.

நவம்பர் 15-ஆம் தேதி, அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. அன்று, முகமது ஷமியின் ஐபிஎல் எதிர்காலத்தின் தலைவிதியும் தீர்மானிக்கப்படும். கோப்பையை வெல்லும் வெறியில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி, அனுபவ வீரரான ஷமியைக் கைவிடுமா, அல்லது அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, October 18, 2025, 19:16 [IST]
Other articles published on Oct 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+