பட்டாசு இல்லாத தீபாவளி.. விராட் கோலியை வச்சு பிரச்சாரம் பண்ணுங்க.. உச்ச நீதிமன்றம் அதிரடி யோசனை
டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசு நாளுக்கு நாள் அபாயகரமான அளவிற்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பட்டாசு இல்லாத பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட மக்களை ஊக்குவிக்க நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி போன்ற பிரபலங்களை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் காற்று மாசு உச்சத்தை தொட்டு வருகிறது. அது குறித்த இந்த வழக்கில் பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் குறித்து தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மத்திய அரசும் டெல்லி அரசும் தீவிரமாக விளம்பரம் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், "தீபாவளி என்பது பாரம்பரியமாகவே விளக்குகளின் திருவிழா. பட்டாசு வெடிப்பது பிற்காலத்தில் தான் வழக்கத்திற்கு வந்தது. பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதை அரசு மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். டெல்லிக்காக கேட்டுக் கொண்டால் பிரபலங்கள் நிச்சயம் உதவி செய்வார்கள். விராட் கோலி போன்ற உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு அரசு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு பிரச்சாரம் செய்யலாம்" என்றார். நீதிபதி பி.பி.வரலேவும், மக்களால் மதிக்கப்படும் விளையாட்டு வீரர்களை அரசு ஏன் விழிப்புணர்வுக்குப் பயன்படுத்தக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக, பட்டாசுப் புகையால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும் என்றும், குழந்தைகள் மூலமாக ஒட்டுமொத்த குடும்பத்தின் மனநிலையை எளிதாக மாற்ற முடியும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். விராட் கோலி ஏற்கனவே இதுபோன்று விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறார். இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் நவம்பர் 4 அன்று ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications

