வந்தாச்சுன்னு சொல்லு... தமிழில் மிரட்டிய சின்ன தல... இதுதாங்க சூப்பர் கூட்டணி!
மும்பை : ஐபிஎல் 2021 தொடரையொட்டி மும்பையில் முதல் 5 போட்டிகளில் விளையாடவுள்ள சிஎஸ்கே அணி, தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
அவர்களின் தீவிர பயிற்சிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் கேப்டன் தோனி மற்றும் ஜடேஜாவுடன் இணைந்து தான் இருக்கும் புகைப்படத்தை அணியின் சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

2வது பேட்ஸ்மேன்
கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் விலகினார் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. கடந்த சீசனில் விளையாடாவிட்டாலும் ஐபிஎல்லின் அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரராக விராட் கோலிக்கு அடுத்ததாக இவர் தொடர்ந்து நீடிக்கிறார்.

திணறிய சிஎஸ்கே
கடந்த தொடரில் சொந்த காரணங்களை காட்டி அவர் விலகிய நிலையில், தொடரின் ப்ளே-ஆப் சுற்றிற்குகூட முன்னேற முடியாமல் சிஎஸ்கே திணறியது. இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் அவர் அணியில் இணைந்துள்ளார். இதையடுத்து அணி இந்த சீசனில் கோப்பையை வெல்லும் என்று அணி வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

தீவிர பயிற்சிகள்
இந்நிலையில் இந்த சீசனில் சுரேஷ் ரெய்னா வெற்றிபெறும் முனைப்பில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அணி வீரர்களுடன் அவர் இணக்கமாக உள்ளதை பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பார்க்க முடிகிறது. இதனிடையே, கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் தான் இணைந்திருக்கும் புகைப்படத்தை ரெய்னா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
'வந்தாச்சுன்னு சொல்லு'
மூவரும் அந்த புகைப்படத்தில் மேட்ச் வின்னர்கள் போல போஸ் கொடுக்கின்றனர். வெற்றிக்கான தீவிரம் மற்றும் புன்னகையும் அவர்களிடம் காணப்படுகிறது. சிஎஸ்கேவின் வழக்கமான அதிரடி கேப்ஷன்களை போல வந்தாச்சுன்னு சொல்லு என்று அவர் தமிழில் தனது கேப்ஷனை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த நாளின் சிறப்பான புகைப்படம் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் புகைப்படம் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளியுள்ளது. இந்த சீசனின் இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மும்பையில் சிஎஸ்கே விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications