மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்தும் விலகுகிறாரா சூர்யகுமார் யாதவ்? இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாற்றம்
மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்தும், இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட்ட நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், தற்போது தனது ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ்-இல் இருந்தும் விலக உள்ளதாக சலசலப்பு எழுந்துள்ளது. திங்கள்கிழமை அன்று காலை, சூர்யகுமார் யாதவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்பான எந்தவொரு புகைப்படமும் அல்லது தகவலும் இடம்பெறவில்லை என்பதை ரசிகர்கள் பார்த்து அதை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், அவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பின்தொடர்வதையும் நிறுத்தியுள்ளார். ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருடன் இருக்கும் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே அவரது பக்கத்தில் எஞ்சியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் தொடர்பான மற்ற வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தையும் அவர் நீக்கி இருக்கிறார். அதனால், அவர் மும்பை அணியிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளார் என்ற பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த சூர்யகுமார், அந்த அணியின் முக்கிய வீரராக இருந்தார். ஆனால், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 தொடர் அவருக்கு மிகவும் மோசமாக அமைந்தது. இந்த சீசனில் அவர் 20.77 சராசரியுடன் வெறும் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். 10 அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 9-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றியது. அவரது இந்த சரிவு காரணமாகவே மும்பை நிர்வாகம் மாற்று வழிகளை யோசிக்கத் தொடங்கியதாகத் தெரிகிறது.
மறுபுறம் இந்திய அணி தேர்வுக்குழுவினரால் சூர்யகுமார் யாதவ் திடீரென ஓரங்கட்டப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சூர்யகுமார் யாதவின் தற்போதைய நிலையை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அணியிலிருந்து நீக்கப்பட்டதற்காக அவர் ஏமாற்றமடைவது நியாயமானதுதான்."
"கடந்த 15 முதல் 18 மாதங்களாக அவரது பேட்டிங் ஃபார்ம் சுமாராக இருந்தாலும், அவர் நாட்டுக்காக டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு கேப்டனாக அவர் தனது கடமையைச் சரியாகச் செய்துள்ளார்" என்றார் அஸ்வின்.
தேசிய அணியில் ஏற்பட்ட புறக்கணிப்பைத் தொடர்ந்து, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியிலும் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
