நாளைய அரையிறுதியில் வீசப்போவது கெயில் புயலா? கோஹ்லி சூறாவளியா?
மும்பை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நடுவே உலக கோப்பை டி20 இரண்டாவது அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் வீசப்போவது விராட் கோஹ்லி சூறாவளியா, கெயில் புயலா என்பதை வைத்தே இரு அணிகளின் வெற்றி தோல்வி முடிவாகும்.
நாளை வியாழனன்று இந்திய-மே.இ.தீவுகளுக்கு இடையிலான விறுவிறுப்பான அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
தற்போதைய டி20 உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 229 ரன்களைக் குவிக்க அதனை இங்கிலாந்து வெற்றிகரமாக துரத்தியது இந்த பிட்சில்தான். அதற்கு முன்பு இங்கிலாந்தை கிறிஸ் கெயில் அடித்து நொறுக்கிய போட்டி நடந்ததும் இங்குதான்.

என்னா அடி
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில், தென் ஆப்பிரிக்கா 400 ரன்களுக்கு மேல் குவித்தது இந்த பிட்சில்தான். அப்போது ரவி சாஸ்திரியின் கோபத்துக்கு பிட்ச் வடிவமைப்பாளர் ஆளானார். இம்முறை அதுபோன்ற சர்ச்சையை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிட்சில் மாற்றம்
இப்படி பேட்டிங்கின் பிரமாண்ட சொர்க்கபுரி மைதானமாக விளங்கும் மும்பை, நாளைய போட்டியின்போது அதே தன்மையோடு இருக்காது என்கிறது வான்கடே வட்டாரம். ஆடுகளத்தில் புற்கள் சம அளவில் இருக்கும் என்றும், பந்துகள் சற்றே மெதுவாக வருமாறும் பிட்ச் இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவர் மட்டுமே
வெஸ்ட் இண்டீசை பொறுத்தளவில் கிறிஸ் கெயிலையும், இந்தியாவை பொறுத்தளவில் விராட் கோஹ்லியையுமே அதிகம் நம்பியுள்ளன. இவர்களை தவிர வேறு யாரும் பெரிதாக பேட்டிங்கில் சாதிக்கவில்லை.

புயலா, சூறாவளியா
கெயில் பொதுவாக புயல் என்று அழைக்கப்படுவார். இந்தியாவின் கோஹ்லி செல்லமாக சூறாவளி என்று அழைக்கப்படுகிறார். எனவே நாளை வீசப்போவது புயலா அல்லது சூறாவளியா என்பதை பொருத்துதான் இரு அணிகளுக்குமான வெற்றி, தோல்வி முடிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications