மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வரும் இரண்டாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் முதல் முறையாக 20 அணிகள் பங்கு பெறுகின்றன. நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணி இந்த உலககோப்பை தொடரில் விளையாடுகிறது.
இதுவரை டி20 உலக கோப்பை தொடரில் எந்த அணிகளும் உலக கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்றது கிடையாது. இதனால் இங்கிலாந்து அணிக்கு அந்த சாதனை படைக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டையே டி20 கிரிக்கெட் போல் ஆடும் இங்கிலாந்து அணி, டி20 கிரிக்கெட்டில் எப்படி விளையாடுவார்கள் என்பது தான் தற்போது பேசும் பொருளாக இருக்கின்றது. இங்கிலாந்தில் பல அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். கேப்டன் ஜாஸ் பட்லர் பாரிஸ்டோ, பில் சால்ட், வில் ஜாக்ஸ், ஹாரி புருக்ஸ், லியோன் லிவிங்ஸ்டோன், மோயின் அலி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.
எனினும் அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த உலகக்கோப்பை தொடரில் முக்கிய வீரராக ஸ்டோக்ஸ் இருந்தார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக உடல் தகுதியை பாதுகாப்பதற்கு இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்று ஸ்டோக்ஸ் முடிவு எடுத்திருக்கிறார்.
மேலும் கடந்த உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற சாம் கரண், ஐ பி எல் தொடரிலும் ஓரளவுக்கு நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார். இதனால் இங்கிலாந்து அணி பெரும் நம்பிக்கையுடன் இருக்கின்றது. இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல பார்மில் இருப்பதும் கூடுதல் நம்பிக்கையை தருகிறது.
எனினும் பில் சால்ட், வீல் ஜாக் போன்ற வீரர்கள் சர்வதேச அளவில் பெரிய அனுபவம் இல்லாதது கொஞ்சம் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. இதேபோன்று வேகப்பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், கிரிஸ் ஜார்டன்,சாம் கரன், ரீஸ் டோப்ளி போன்ற வீரர்கள் உள்ளனர். இதில் ஜோப்ரா ஆர்ச்சர் நீண்ட காயத்திற்கு பிறகு தற்போது அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் அவர் எந்த அளவுக்கு செயல்பட போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆடுகளங்களில் சுழற் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து அணியின் ஆதில் ரசித், மோயின் அலி ஆகியோர் முக்கிய வீரராக அந்த அணிக்கு இருப்பார்கள். புஷ்பா திரைப்படத்தில் எப்படி வில்லன் பகத் பாஸில், ஏதோ ஒன்று குறைகிறது என்று சொல்வாரோ! அதேபோல் தற்போது இங்கிலாந்து அணியை பார்க்கும் போது, ஏதோ ஒன்று குறைகிறது என்ற மனநிலை தான் ரசிகர்களுக்கு இருக்கின்றது.