மும்பை : வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்க உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மற்ற அணிகளை விட இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடரையும் வென்றதில்லை.
அது மட்டும் அல்லாமல் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி t20 உலக கோப்பையை வெல்லவில்லை. இந்த சோகமான ரெக்கார்டை மாற்ற வேண்டிய உத்வேகத்துடன் இந்திய அணி வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு தலையான பொறுப்பு இருக்கிறது.

அதிலும் விராட் கோலிக்கு தற்போது போதாத காலமாக இருக்கிறது. அவரை டி20 உலக கோப்பை தொடரில் சேர்க்கவே கூடாது என்று பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு காரணம் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரைட் மிகவும் குறைவாக இருப்பதாகவும் பலரும் விமர்சித்து இருந்தார்கள். இதற்கு பதில் அளிக்கும் விதமாக விராட் கோலி ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் அபாரமாக விளையாடி தன்னுடைய ஸ்ட்ரைக் ரைட்டை உயர்த்தி பதிலடி கொடுத்தார்.
மேலும் ஆரஞ்சு கோப்பையும் வென்ற இந்த சூழலில் விராட் கோலிக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஐபிஎல் தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக தான் களமிறங்கி ரன்களை சேர்த்தார். ஆனால் டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் களம் இறங்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் பவர் பிளே முடிவடைந்த பிறகு தான் விராட் கோலி களத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது.
இந்த சூழலில் அவர் தன்னுடைய ஸ்ட்ரைக் ரைட்டை உயர்த்துவாரா இல்லை ரன் குவிக்க தடுமாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் விராட் கோலி ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக நன்றாக விளையாடுவதால் அவருக்கு இந்திய டி20 அணியிலும் தொடக்க இடத்தை கொடுக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலி தொடக்க வீரராக வந்தால் நடுவரிசையில் சிவம் துபே அல்லது கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்த ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு ஏற்படும். இதனால் கோலிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இது கருதப்படுகிறது.