பார்பிடாஸ்: ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள மற்ற அணிகள் மே மாதம் இறுதியில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு செல்ல உள்ளது.
ஜூன் ஒன்றாம் தேதி முதல் 29ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் ஒன்பது மைதானங்களில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் வெஸ்ட் இண்டீசில் ஆறு மைதானங்களிலும், அமெரிக்காவில் மூன்று மைதானங்களிலும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் போட்டிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் டிரிண்டாட் மற்றும் டோபாகோ பகுதியில் நடைபெறும் போட்டிக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருப்பதாக பதிவு ஒன்று வெளியாகியது.
இதனை அடுத்து டிரிண்டாட் மற்றும் டோபாகோ நாட்டின் பிரதமர் கெத் ரோவ்லி பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இது தொடர்பாக ஐசிசி மற்றும் டிரிண்டாட் அரசு இணைந்து அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது அதில் போட்டிகள் நடைபெறுவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஐசிசி உறுதி செய்திருப்பதாகவும் தீவிரவாத அச்சுறுத்தலையொட்டி பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிரிண்டாட் பிரதமர் ரவுலி துரதிர்ஷ்டவசமாக 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எங்கள் பகுதியில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளை நடத்துவதை சில அமைப்பு விரும்பவில்லை என்றும் இதனை நாங்கள் தீவிரமாக எதிர் கொண்டு கூடுதல் கவனம் செலுத்தி இந்த போட்டியை நடத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த அச்சுறுத்தலை முன்னிட்டு ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதாகவும் மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும் பிரதமர் ரவுலி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சூப்பர் 6 சுற்று விளையாடுகிறது. இந்திய வீரர்களை குறி வைத்துதான் இப்படி ஒரு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது பிசிசிஐ-யை கலக்கமடைய செய்திருக்கிறது.