விராட் கோலி இல்லாம ஒன்னுமே செய்ய முடியாது.. கொந்தளித்த ஸ்ரீகாந்த்.. காரணமே இதுதான்!
சென்னை : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி இருந்தால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான அட்டவணை மற்றும் மைதான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை ஜூன் 5ஆம் தேதியும், பாகிஸ்தான் அணியை ஜூன் 9ஆம் தேதியும் எதிர்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில் ஐசிசி மும்முரமாக உள்ளது. குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடரின் போஸ்டர் பாயாக விராட் கோலி தான் இருந்து வருகிறார். அமெரிக்கா ரசிகர்களும் விராட் கோலி விளையாடுவதை நேரில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடும் என்று ஜனவரி மாதம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். இதனிடையே விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் பிரபல நாளிதழ் ஒன்று, டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலியை தேர்வு செய்ய வாய்ப்பில்லை என்றும், அவருடன் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளி வந்தது.
இந்த விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதில், விராட் கோலி இல்லாமல் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் பயணிக்க வாய்ப்பே இல்லை. அவர் நிச்சயம் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும். 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற காரணமே விராட் கோலி தான். இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்றவர் விராட் கோலி.
சில விமர்சகர்களுக்கு வேறு வேலையே கிடையாது. எதன் அடிப்படையில் இதுபோன்ற தகவல்களை வெளியிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், விராட் கோலி கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக 6 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 296 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications