IND vs BAN: செம ட்விஸ்ட்.. ஹர்திக் பாண்டியா கண் முன்பே தோனியின் சிஷ்யனை தயார் செய்த ரோஹித் சர்மா
நியூயார்க் : 2024 டி20 உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இந்த பயிற்சி போட்டிக்காக இந்திய வீரர்கள் தயாராகி வந்தனர். அப்போது வலைப் பயிற்சியில் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படும் சிவம் துபேவுக்கு ரோஹித் சர்மா சிறப்பு பந்துவீச்சு பயிற்சியை அளித்தார். இது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜாம்பவான் தோனியால் பட்டை தீட்டப்பட்டவர் தான் சிவம் துபே. அவர் சிஎஸ்கே அணியில் இடம் பெறுவதற்கு முன் சராசரியான பேட்ஸ்மேனாகவும், சராசரியான வேகப் பந்துவீச்சாளராகவும் இருந்தார். அவரை முழு நேர பேட்ஸ்மேனாக மாற்றினார் தோனி.

அதன் பின் சிவம் துபே கடும் பயிற்சிகளை மேற்கொண்டு டி20 போட்டிகளில் மிடில் ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடுவதில் உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக மாறினார். இதை அடுத்து அவருக்கு உலகக்கோப்பைக்கான இந்திய டி20 அணியிலும் இடம் அளிக்கப்பட்டது.
மறுபுறம் வேகப் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இடையே விரிசல் இருப்பதாக பேச்சு உள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்தே அவர் மீது ரோஹித் சர்மா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மற்றொரு வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான சிவம் துபே இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கிறார். அவர் தற்போது பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்தாலும், அவரை வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்துவதில் கேப்டன் ரோஹித் சர்மா தீவிரமாக இருக்கிறார். இதை அடுத்துதான் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கு முன்னதாக சிவம் துபேவுக்கு வேகப் பந்துவீச்சுக்கான சிறப்பு பயிற்சியை தானே முன் நின்று அளித்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
பொதுவாக பந்துவீச்சு பயிற்சியாளரோ, தலைமை பயிற்சியாளரோ அல்லது மூத்த பந்துவீச்சாளர்களோ தான் ஒரு புதிய பந்து வீச்சாளருக்கு பயிற்சி அளிப்பார்கள் அல்லது ஆலோசனைகள் கூறுவார்கள். கேப்டன் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேசுவார். ஆனால் இங்கே சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக சிவம் துபே-வுடன் ரோஹித் சர்மா செலவிட்டார்.
எந்த நீளத்தில் பந்து வீச வேண்டும்? எந்த லைனில் பந்து வீச வேண்டும்? என நிறைய அறிவுரைகளை அளித்தார் ரோஹித் சர்மா. இதன் மூலம் சிவம் துபேவை, ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறாரா கேப்டன் ரோஹித் சர்மா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணிக்கு ஆப்பு வைக்கப் போகும் ரோஹித் சர்மா - ஹர்திக் பாண்டியா மோதல்.. எச்சரித்த ஹர்பஜன் சிங்
ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் துணை கேப்டனாக இடம்பெற்று இருக்கிறார். அவரை அணியை விட்டு நீக்குவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அதேசமயம் ஒரே போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே என இருவரையும் ஆட வைக்க முடியும். அப்படி நடந்தால் அது ஹர்திக் பாண்டியாவுக்கு மறைமுகமாக அழுத்தத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பையின் இடையே காயத்தில் சிக்கினால் அப்போது சிவம் துபே அவரது இடத்தை பிடிப்பார்.


Click it and Unblock the Notifications