ராஜ்கோட் : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
அண்மை காலமாக இந்திய அணியின் கேப்டன்சியில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே மறைமுக போட்டி நடைபெற்று வருகிறது. ஏனென்றால் கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ரோகித் சர்மா இந்திய டி20 அணியில் இடம்பெறவில்லை. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அனைவரும் விளையாடி வந்தனர்.

உலகக்கோப்பை தொடர் முடிவடைந்து தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் கூட ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு தலைமை பொறுப்பை ஏற்கவில்லை. இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன்சி பொறுப்பு ரோகித் சர்மாவிடம் இருந்து பறிக்கப்பட்டது.
அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருக்கு சக மும்பை வீரர்களில் யாருமே வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டதால், ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் 14 மாதங்களுக்கு பின் இந்திய டி20 அணிக்காக ரோகித் சர்மா களமிறங்கினார்.
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் கேப்டனாக சதம் விளாசிய ரோகித் சர்மா, டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதை உறுதி செய்தார். இருப்பினும் ஹர்திக் பாண்டியா மனநிலை என்ன, பிசிசிஐ முடிவு என்ன என்பதில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தது. இந்த நிலையில் செளராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தை நிரன்ஜன் ஷா மைதானம் என்று பெயர் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், இந்திய அணியின் 3 வடிவங்களுக்குமான கேப்டனாக ரோகித் சர்மா தான் செயல்பட்டு வருகிறார். ஆஃப்கானிஸ்தான் டி20 தொடர் மூலமாக ரோகித் சர்மா மீண்டும் டி20 பக்கம் திரும்பிவிட்டார். அதனால் ரோகித் சர்மா தலைமையில் தான் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவோம். அவரின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார்.
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய போது, வேறு யாருக்கும் துணை கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை. அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, ரோகித் சர்மா களத்தில் இருந்து இந்திய அணியின் ஸ்கோரை 212 ரன்களாக மாற்றினார். அவரை நாம் எந்த கேள்வியும் எழுப்ப கூடாது. ஏனென்றால் அவரால் இப்போதும் விளையாட முடியும். உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வென்றோம்.
இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தோம். ஆனால் தோல்வி என்பது விளையாட்டின் ஒரு அங்கம் தான். யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்கள் வெற்றிபெறுவார்கள். அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தென்னாப்பிரிக்கா சென்றுவிட்டார். அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்கள் வந்ததால், எங்களால் சந்திக்க முடியவில்லை. அவருடன் நேரம் கிடைக்கும் போது பேசி கொள்கிறேன். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு அவர் தான் பயிற்சியாளர் என்று தெரிவித்துள்ளார்.