டி20 உலககோப்பை- இந்திய அணியில் ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பு இல்லை.. நடராஜன், தினேஷ்க்கு இடமில்லை
மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஒரு தமிழக கிரிக்கெட் வீரர் கூட இல்லாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் 15 பேர் கொண்ட வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் ரிஷப் பந்த், சிவம் துபே, ஜடேஜா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், பும்ரா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நடப்பு தொடரில் தினேஷ் கார்த்திக் அபாரமாக விளையாடி வருகிறார். 38 வயதான தினேஷ் கார்த்திக், இறுதி கட்டத்தில் களமிறங்கி ரன்களை சேர்த்து வருகிறார். தினேஷ் கார்த்திக் பினிஷர் ரோலில் பட்டையை கிளப்பலாம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து ரோகித் சர்மாவே டி20 உலக கோப்பை வருவதால் தினேஷ் கார்த்திக் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று கூறி கிண்டல் அடித்தார்.
இந்த தொடரில் தினேஷ் கார்த்திக் 10 போட்டிகளில் விளையாடி 262 ரன்கள் சேர்த்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 195 என்ற அளவில் இருக்கிறது. சராசரி 52 என்ற அளவில் இருக்கிறது. இதேபோன்று ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 10 போட்டிகளில் விளையாடி 418 ரன்கள் அடித்திருக்கும் அவர் சராசரியாக 46 ரன்களும் ஸ்ட்ரைக் ரேட் 135 என்ற அளவில் இருக்கிறது.

எனினும் சாய் சுதர்சனின் பெயர் டி20 உலக கோப்பையில் பரிசீலிக்கப்படவில்லை. இதேபோன்று டி20 உலக கோப்பையில் இந்திய அணி நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடராஜன் 7 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். நடராஜன் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் டி20 அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருடைய பெயரும் பரிசீலிக்கப்படவில்லை. இதேபோன்று கடந்த டி20 உலக கோப்பையில் இடம் பிடித்த தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடப்பு உலக கோப்பை தொடரில் சேர்க்கப்படவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் எட்டு போட்டுகளில் விளையாடி வெறும் இரண்டு விக்கெட்களை மட்டும் தான் விழித்திருக்கிறார். எனினும் அஸ்வினுக்கு பேட்டிங் தெரியும் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய பெயரும் சேர்க்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications