மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூயார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன் அடுத்து களமிறங்கிய இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 113 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்தியா ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஏழு ரன்கள் முக்கிய காரணமாக அமைந்தது என்று இந்திய அணியின் ஸ்டார் பவுலரான முஹமது சிராஜ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நான் தற்போது பேட்டிங்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு பயிற்சி செய்து வருகின்றேன். ஐபிஎல் தொடர்கள் கூட கீழ் வரிசை வீரர்களின் பேட்டிங் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட நான் அடித்த ஏழு ரன்கள் எவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம். அந்த ஏழு ரன்கள் என் அணியின் வெற்றிக்கு உதவியது நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன் என்று முகமது சிராஜ் கூறியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மிகப்பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றது.
இதனால் பந்து வீசும் போது பெரிய அளவில் முயற்சிகளை செய்யாமல் சிம்பிளாக பந்து வீச வேண்டும் என்று நினைத்தேன். ஒரே இடத்தில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டும் என்றும் நினைத்தேன் என்று சிராஜ் கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து பேசிய ரிஷப் பன்ட் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தான் பிடித்த அனைத்து கேட்ச்சும் எனக்கு மிகவும் பிடித்தது தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இதை செய்யும் போது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அதேசமயம் உலகக்கோப்பை தற்போது தான் தொடங்கி இருக்கின்றது. இன்னும் நிறைய போட்டிகளில் ஆட வேண்டும். என்னுடைய கவனம் எல்லாம் அதில் தான் இருக்கின்றது. சிராஜுக்கும் அவருடைய பேட்டிங் குறித்து நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறினார்.