டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு விழுந்த பேரிடி.. முக்கிய வீரர் ஹசரங்கா நீக்கம்.. என்ன நடந்தது?
கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா, காயம் காரணமாகத் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். இது சொந்த மண்ணில் வெற்றிகளை குவிக்கக் காத்திருந்த இலங்கை அணிக்குக் கடுமையான சோதனையாக அமைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் போதே ஹசரங்காவுக்கு இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. பந்துவீசும்போதே அவர் வலியால் அவதிப்படுவதைக் காண முடிந்தது. இருப்பினும், அணியின் நலன் கருதி வலியையும் பொறுத்துக்கொண்டு தனது 4 ஓவர்களை முழுமையாக வீசினார். அந்தப் போட்டியில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

நான்கு வாரங்கள் ஓய்வு
போட்டிக்குப் பிறகு திங்கட்கிழமை அவருக்கு எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், காலில் ஏற்பட்டுள்ள தசைநார் காயம் குணமடையக் குறைந்தது நான்கு வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலகக்கோப்பைத் தொடர் அதற்குள் முடிந்துவிடும் என்பதால், அவர் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வீரர் யார்?
ஹசரங்காவுக்குப் பதிலாக, 31 வயதான சுழற்பந்து வீச்சாளர் துஷான் ஹேமந்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை இலங்கை அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளிலும், 3 டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளார்.
இலங்கைக்குச் சவால்
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹசரங்கா இல்லாதது இலங்கை அணிக்குப் பெரும் இழப்பாகும். அடுத்தகட்ட போட்டிகளில் ஓமன், ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.
ஹசரங்கா இல்லாத நிலையில், சுழற்பந்து வீச்சின் முழுப் பொறுப்பும் இப்போது மகேஷ் தீக்ஷனா மீது விழுந்துள்ளது. ஹசரங்காவின் இடத்தை நிரப்பும் அளவுக்கு மாற்று வீரர் செயல்படுவாரா என்பது போகப்போகத் தெரியும்.
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் அடுத்து நடைபெற உள்ள போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications