“ஆரம்பமே இப்படி ஒரு அதிர்ச்சியா?” இந்திய அணிக்கு ஐசிசி திடீர் அபராதம்.. புள்ளிகளும் குறைப்பு!
செஞ்சூரியன்: புத்தாண்டு அன்றே இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் அறிவிப்பு ஒன்றை ஐசிசி அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் செஞ்சூரியன் மைதானத்தில் வெற்றி கண்ட முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

இந்திய அணி உற்சாகம்
இதனையடுத்து 2021ம் ஆண்டை வெற்றிகரமாக கடந்துவிட்டோம் என இந்திய வீரர்கள் குதூகலமாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அதே நம்பிக்கையுடன் அடுத்துள்ள டெஸ்ட் போட்டிகளையும் கைப்பற்ற இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அதற்கு ஆப்பு வைக்கும் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

குற்றச்சாட்டுக்கள்
செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய அணி பவுலிங் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. ஆட்டத்தின் நடுவர்கள் இதுகுறித்த அறிக்கையை ஐசிசியிடம் சமர்பித்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் விராட் கோலியும் தவறை ஒப்புக்கொண்டதால், இந்திய அணி அபராதம் மற்றும் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

அபராதம்
அதாவது ஐசிசியின் ஆர்டிகல் 2.22 விதிமுறை படி இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் போட்டிக்கட்டணத்தில் 20 சதவீதத்தை அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வேறு நடைபெற்று வருவதால் ஆர்டிக்கல் 16.11 விதிமுறைப்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் ஒரு புள்ளியை ஐசிசி குறைத்துள்ளது.

புள்ளிப்பட்டியல் விவரம்
இந்த புள்ளிப்பட்டியலில் தற்போது வரை இந்திய அணி 64.28 % என்ற வெற்றி சதவீதத்துடன் 4வது இடத்தில் உள்ளது. புள்ளி குறைக்கப்பட்ட பின்னர் இந்த சதவீதம் தற்போது 63.09 என குறைந்துள்ளது. எனினும் 4வது இடத்தில் இருந்து வேறு எந்த இடத்திற்கும் மாறவில்லை.


Click it and Unblock the Notifications