இலங்கையுடனான ஒருநாள் போட்டி.. முழு பலத்தை பெற்ற இந்திய அணி.. ஆனாலும் ஒரு சிக்கல்!
கவுகாத்தி: இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய படை நீண்ட நாட்களுக்கு பிறகு முழு பலத்தையும் பெற்றுள்ளது. எனினும் அதிலும் ஒரு குறையை வைத்துள்ளனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஹர்திக் பாண்ட்யாவின் படை 2 - 1 என்ற புள்ளிக்கணிக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

ரோகித்தின் உடல்நிலை
வங்கதேச தொடரில் கைவிரலில் காயம் ஏற்பட்டு சென்ற ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் மீண்டும் இந்த தொடருக்கு வருகிறார். எனவே டி20 தொடரில் இளம் படை களமிறங்கிய சூழலில் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு முழுக்க முழுக்க சீனியர் படை களமிறங்குகிறது. இதற்காக பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் இருந்தவர்கள் கவுகாத்தி வந்தடைந்துள்ளனர்.

வீரர்கள் கம்பேக்
ஓய்வில் இருந்த விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதே போல பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்கள் கம்பேக் தந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் முதல் காயத்தால் விலகியுள்ள பும்ரா தற்போது முழுமையாக தயாராகியுள்ளதாக தெரிகிறது. இதே போல தோள்பட்டை காயத்தில் இருந்த முகமது ஷமியும் தயாராகிவிட்டார்.

டிராவிட் திட்டம்
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராவதற்கு இன்னும் குறைந்த போட்டிகளே இருக்கும் சூழலில் அனைத்து வீரர்களும் அணிக்கு திரும்பிவிட்டனர். இதனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது திட்டங்களை செயல்படுத்தி பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதில் இன்னும் ஒரே ஒரு குறை உள்ளது.

என்ன குறைகள்
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இன்னும் அணிக்கு திரும்பவில்லை. காலில் ஏற்பட்ட காயத்தால் என்.சி.ஏவில் உள்ள ஜடேஜா இன்னும் குணமாகவில்லை. அடுத்து வரவுள்ள நியூசிலாந்து தொடருக்குள் அவர் முழு உடற்தகுதி பெற்றுவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதே போல அஸ்வினும் அணியில் சேர்க்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications