வரலாற்றிலேயே மிக மோசம்.. ஆஸி, அணிக்கு மறக்க முடியா அடி கொடுத்த இந்தியா.. அப்படி என்ன ஸ்பெஷல்!
நாக்பூர்: பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் மோசமான தோல்வியை பெற வைத்துள்ளனர் ரோகித் சர்மாவின் படையினர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் சுவாரஸ்யத்துடன் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அதிர்ச்சி வைத்தியம் தந்தனர். இருவரின் சுழலில் சிக்கி அந்த அணி 177 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது.

முதல் டெஸ்ட் போட்டி
மிகக்குறைந்த ஸ்கோரை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ரோகித், ஜடேஜா, அக்ஷர் பட்டேல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 400 ரன்களை குவித்தது. 223 ரன்கள் பின் தங்கிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸிலாவது சவால் கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தாதா? என்று எதிர்பார்த்தவர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. வெறும் 91 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது.

வரலாற்றில் முதல் முறை
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி பெறும் மிகவும் மோசமான தோல்வி இதுதான் ஆகும். அதாவது இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி பதிவு செய்த மிக குறைந்த ஸ்கோர் 91 ரன்கள் தான் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 2004ம் ஆண்டு இந்திய மண்ணில் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருந்ததே குறைந்த ரன்னாக இருந்தது. அதற்கு அடுத்ததாக 1959ல் 105க்கு ஆல் அவுட்டாகியிருந்தனர்.

மிகப்பெரிய வெற்றி
இதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவின் 3வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். 1997ம் ஆண்டு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. அதன்பின்னர் 2012ம் ஆண்டு இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 10 வருடங்களுக்கு பிறகு தற்போது இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளனர்.

ஸ்பின்னர்கள் ஆதிக்கம்
இந்தியாவின் இந்த பெருமை மிகுந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை கூறலாம். இப்போட்டியில் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்கள் கைப்பற்றியதுடன் 70 ரன்களை விளாசினார். இதற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை எடுத்த சூழலில் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.


Click it and Unblock the Notifications