4வது டெஸ்டில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி.. முழு விவரம்
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டி யாருமே எதிர்பார்க்காத வகையில் முடிவடைந்ததால் இந்திய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை வென்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி 9ம் தேதியன்று தொடங்கியது. முதல் 3 போட்டிகளில் இந்தியா 2 வெற்றிகளையும் ஆஸ்திரேலியா ஒரு வெற்றியையும் பெற்றிருந்த சூழலில் கடைசி டெஸ்ட் அகமதாபாத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 480 ரன்களை குவித்தது. மிகவும் சவாலான இலக்காக இருந்த போதும், இந்தியா விடுவதாக இல்லை.

4வது டெஸ்ட் போட்டி
அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு நன்கு உதவும்படி இருந்ததால் இந்தியாவும் தரமான பேட்டிங்கை வெளிகாட்டியது. ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 235 பந்துகளில் 128 ரன்களை விளாசினார். இதன் பின்னர் வந்த சட்டீஸ்வர் புஜாரா 42 ரன்களை அடிக்க, முழு பொறுப்பையும் விராட் கோலி ஏற்றுக்கொண்டார். சிறப்பாக ஆடிய கோலி 364 பந்துகளை சந்தித்து 186 ரன்களை விளாசினார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் டெஸ்ட் சதத்தை அடித்தார். அவருடன் சேர்ந்து ஆடிய கே.எஸ்.பரத் 44 ரன்களும், அக்ஷர் பட்டேல் 79 ரன்களையும் சேர்க்க இந்திய அணி 571 ரன்களை குவித்தது.

2வது இன்னிங்ஸ்
91 ரன்கள் பின் தங்கிய சூழலில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்த முறையும் பேட்டிங்கில் சவால் கொடுத்தது. பிட்ச்-ல் கொஞ்சம் கூட பவுலர்களுக்கு உதவி இல்லாமல் இருந்ததால் விக்கெட் எடுக்க சிரமப்பட்டனர். 5வது நாள் ஆட்டத்தில் 2 செஷன்கள் முடிவடையும் சூழலுக்கு சென்ற போதும் ஆஸ்திரேலிய அணி 175 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே அடித்து விளையாடி வந்தது. இதனால் எப்படியும் போட்டிக்கு முடிவு கிடைக்காது என்பது உறுதியானது.

ஆஸி,யின் முடிவு
இதனையடுத்து 17 ஓவர்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணி டிக்ளர் கொடுத்துவிட போட்டி சமனில் முடிந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பகிர்ந்துக்கொண்டனர்.

இன்னும் முடியல
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தான் மீண்டும் ஒருமுறை பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த முக்கியமான போட்டி வரும் ஜூன் 7ம் தேதி முதல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications