
ஆர்சிபியின் கோப்பை கனவு
ஐபிஎல் 2021 தொடர் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. ஆர்சிபி அணி கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய போதிலும் அதன் கோப்பை கனவு மட்டும் இன்னும் பூர்த்தியாகாமலேயே உள்ளது. அந்த அணியும் மற்ற அணிகளை போலவே சிறப்பான திட்டங்களுடன் இந்த தொடரை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

29ம் தேதி துவக்கம்
ஏற்கனவே பெங்களூருவில் அந்த அணியின் சில வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும், வரும் 29ம் தேதி முதல் சென்னையில் முறையான பயிற்சிகளில் அணி வீரர்கள் ஈடுபட உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆர்சிபி விளையாட உள்ளது.

விராட் கோலி அறிவிப்பு
இந்த தொடரில் தான் துவக்க வீரராக விளையாட உள்ளதாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளார். இந்நிலையில் முஸ்தாக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடி ஆர்சிபியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் முகமது அசாருதீன், தான் அணியில் இடம்பெற்றவுடன் உடனடியாக விராட் கோலி தனக்கு வாழ்த்து செய்தி அனுப்பியதை நினைவு கூர்ந்துள்ளார்.

அசாருதீன் விருப்பம்
மேலும் விராட்டுடன் இணைந்து விளையாடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அசாருதீன், விராட்டை பார்த்தவுடன் அவரிடம் தான் கேட்க விரும்பும் கேள்வி குறித்தும் தெரிவித்துள்ளார். எவ்வாறு நிலையான கிரிக்கெட் வீரராக தான் விளங்குவது என்பது குறித்து தான் கேட்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான கேப்டன்
மேலும் உலக அளவில் சிறப்பான பேட்ஸ்மேன் மற்றும் சிறப்பான கேப்டனாக விராட் கோலி விளங்கி வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் 50க்கும் மேற்பட்ட சராசரியை விராட் கோலி பெற்றுள்ளதையும் அசாருதீன் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications