மும்பை: இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே போகிறது. பார்வையாளர்கள் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஐபிஎல் தொடர் பிசிசிஐ-க்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டி கொடுத்து வருகிறது. இதனால் ஐபிஎல் தொடருக்கான முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. ,
ஐபிஎல் தொடரை பார்த்து பல்வேறு நாடுகளும் லீக் தொடரை நடத்தி வருகின்றன. பிக் பேஷ் லீக், சிபிஎல், பிஎஸ்எல், எல்பிஎல் வகையில் 2 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து 100 பந்துகளை வைத்து விளையாடும் The Hundred லீக் தொடர் தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடரை போலவே நகரங்களை மையமாக வைத்து பெயரிடப்பட்டன.

தற்போது ஹன்ட்ரட் லீக் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் டிஆர்பி கடந்த சீசனை விடவும் இந்த சீசனில் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஹன்ட்ரட் லீக் தொடரை ஒளிபரப்பிய ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தரப்பில், கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு ஆடவர் லீக் தொடருக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவிகிதம் குறைந்துள்ளது.
அதேபோல் மகளிர் ஹன்ட்ரட் லீக் தொடருக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை 41 சதவிகிதம் வரை குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி நடந்த போதும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்காதது ஒளிபரப்பாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏற்கனவே ஹன்ட்ரட் லீக் தொடரை முதலீடு செய்ய ஐபிஎல் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஏனென்றால் 3 சீசன் முடிவடைந்த நிலையில், முதலீட்டாளர்கள் பலருக்கும் எதிர்பார்த்த அளவிற்கான லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அம்பானி, சஞ்சீவ் கொயங்கா, காவ்யா மாறன், பார்த் ஜிண்டால் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் எஸ்ஏ20, எமிரேட்ஸ் லீ, எம்எல்சி உள்ளிட்ட தொடர்களில் முதலீடு செய்துள்ளனர்.
ஒருவேளை ஹன்ட்ரட் லீக் தொடரில் ஐபிஎல் உரிமையாளர்கள் முதலீடு செய்யும் பட்சத்தில், அந்த அணிகளின் பெயர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் ஐபிஎல் தொடர் தான் கெத்து என்று கொண்டாடி வருகின்றனர். வரும் காலங்களில் கால்பந்து தொடரில் சாம்பியன்ஸ் லீக் போல் ஒரு தொடரை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.