மும்பை : இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலுக்கு தொடர்ந்து இடம் மறுக்கப்பட்டு வருகிறது.
அது ஏன் என்ற காரணம் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வுக் குழு தலைவர் அஜீத் அகர்கர் அதுபற்றி நேரடியான பதிலை சொல்லவில்லை.
இந்த நிலையில், முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் போகிற போக்கில் சாஹளை ஏன் அணியில் தேர்வு செய்யாமல் தவிர்க்கிறார்கள் என்பது பற்றி சொன்ன ஒரு தகவல் நெருப்பை பற்ற வைத்துள்ளது.

சாஹல் செயல்பாடு : இந்திய அணிக்கு சுழற் பந்துவீச்சில் சாஹல் பல போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். போட்டிகளை வென்றும் கொடுத்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் கூட 21 விக்கெட்கள் சாய்த்து அந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருந்தார்.
உலகக்கோப்பையில் இல்லை : ஆனாலும், ஐபிஎல் தொடருக்கு பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வேஸ்ட் இண்டீஸ் தொடரில் பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் சாஹல் ஆடினார். அதைத் தவிர அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டு வந்தது, உச்சகட்டமாக உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் அவர் இடம் பெறவில்லை.
அக்சர் போனால் அஸ்வின் : இந்திய அணியின் ஒரே ஆஃப் ஸ்பின்னராக அக்சர் பட்டேல் மட்டுமே உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக மற்றொரு சுழற் பந்து வீச்சாளரான சாஹலை அழைக்காமல், கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹர்பஜன் சொன்ன தகவல் : இப்படி சாஹலை சுத்தமாக இந்திய அணி வெறுப்பதன் காரணம் என்ன என்பது பற்றி பேசிய ஹர்பஜன் சிங், அவர் யாருடனாவது சண்டை போட்டிருக்க வேண்டும் அல்லது யாரைப் பற்றியும் யாரிடமாவது வாய் தவறி பேசி இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏன் அவரை எந்த சூழ்நிலையிலும் அணியில் தேர்வு செய்யாமல் போக வேண்டும் என்றார்.
கோலி அணி : விராட் கோலி கேப்டனாக இருந்த போது அவரைப் பற்றி துதி பாடும் வீரர்கள் அணியில் இருந்தனர். விராட் கோலி பற்றி சாஹல் பாராட்டி பேசுவதும் வாடிக்கை தான். ஆனால், ரோஹித் சர்மா கேப்டனான பின் அதைத் தாண்டி அணியில் ஏதோ நடந்திருக்க வேண்டும். குறிப்பாக 2022ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து தான் சாஹல் அணியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அப்போது சாஹல், அணியில் யாரையோ புண்படுத்தும் வகையிலோ, எரிச்சலூட்டும் வகையிலோ நடந்திருக்கலாம். அதன் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா அவர் மீது இருக்கும் கோபம் அல்லது அதிருப்தியில் அவரை நீக்கி இருக்கலாம்.
டெஸ்ட் அணிக்கு முயற்சி : அதன் காரணமாக, அவரை இனி எப்போதும் அணியில் தேர்வு செய்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஹர்பஜன் சிங் இதைப் பற்றி வெளிப்படையாக கூறுகிறார் என்றால் அணியில் ஏதோ புகைச்சல் இருக்கக் கூடும். மேலும், உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்ட உடனே சாஹல் இங்கிலாந்து கவுன்டி தொடரில் ஆடும் முடிவை எடுத்து விட்டார். ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளை விட்டுவிட்டு அவர் டெஸ்ட் அணியில் இடம் பெற முயற்சிக்கப் போவதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் அவருக்கும் என்ன காரணத்தால் தன்னை அணியில் தேர்வு செய்யவில்லை என்பது தெரிந்தே இருக்கலாம்.