மும்பை: "ஐபிஎல்-ல் முதல் பந்திலேயே சிக்ஸர், அதிவேக சதம் என மைதானத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களைப் பந்தாடும் அந்த 14 வயது சிறுவன், தன்னைச் சந்திக்க வந்த ரசிகர்களைப் பார்த்ததும் வெட்கத்தில் நெளிந்தான்" என்று வைபவ் சூர்யவன்ஷி குறித்து அவரது சக அண்டர் 19 அணி வீரர் கூறி இருக்கிறார். இந்த சம்பவம் இளம் கிரிக்கெட் புயல் வைபவ் சூர்யவன்ஷியின் மற்றொரு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, 2025 ஐபிஎல் தொடரின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். கடந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 1.1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தபோது, ஐபிஎல் வரலாற்றில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

தன் மீதான எதிர்பார்ப்பை சற்றும் குறைக்காமல், களமிறங்கிய முதல் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதோடு நில்லாமல், ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவரின் அதிவேக சதத்தைப் பதிவு செய்து, தனது பெயரை கிரிக்கெட் உலகில் அழுத்தமாகப் பதிவு செய்தார். அந்த சீசனில் வெறும் 7 இன்னிங்ஸ்களில் 252 ரன்களை 206 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் குவித்தார்.
ஐபிஎல்-க்குப் பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அண்டர்-19 அணிக்காகக் களமிறங்கிய வைபவ், அங்கும் தனது அதிரடியைத் தொடர்ந்தார். 5 போட்டிகளில் 355 ரன்கள் குவித்து, தொடரின் நாயகனாகத் திகழ்ந்தார். அப்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை, அவரது சக அணி வீரரான விஹான் மல்ஹோத்ரா பகிர்ந்துள்ளார்.
"இங்கிலாந்தில் நாங்கள் இருந்தபோது, வைபவ்வின் ரசிகர்கள் சிலர், ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெர்சியை அணிந்துகொண்டு, அவரைக் காண்பதற்காகவே 6 மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தனர். அவர்கள், 'வைபவ்-ஐ அழையுங்கள்' என்று கூறினார்கள். ஆனால், அவனுக்கோ அவர்களைப் பார்க்க ஒரே வெட்கம். நாங்கள் அவனைக் கிண்டல் செய்துகொண்டே இருந்தோம். அணியில் அவனே இளையவன் என்பதால், நாங்கள் அவனை ஒரு குழந்தை போலப் பார்த்துக்கொள்வோம்" என்கிறார் விஹான்.
மேலும், "ஒரு போட்டியில் நானும், வைபவும் 209 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தோம். இருவரும் சதம் அடித்தோம். ஆனால், அவன் மட்டும் 10 சிக்ஸர்களை விளாசினான். அவனது பேட்டிங்கை மிக அருகில் இருந்து பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம். ஐபிஎல்-ல் அவன் சிக்ஸர் அடிப்பதைப் பார்த்து, இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்கே வந்தது" என்று தனது ஜூனியரைப் பற்றி வியந்து பேசினார் விஹான் மல்ஹோத்ரா.