TN vs GUJ : முதல் போட்டியிலேயே இப்படியா.. சொதப்பிய சாய் சுதர்சன்.. தமிழ்நாடு அணி மோசமான தோல்வி !
அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான முதல் ரஞ்சி டிராபி போட்டியிலேயே தமிழ்நாடு அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
நடப்பாண்டுக்கான ரஞ்சி டிராபி சீசன் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு அணி இளம் வீரர் சாய் கிஷோர் தலைமையில் களமிறங்கியது. கடந்த சீசனிலேயே சில போட்டிகளில் சாய் கிஷோர் தமிழ்நாடு அணியை வழிநடத்தி இருந்ததால், இம்முறை அவர் முழு நேர கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். முதல் போட்டியில் தமிழ்நாடு அணி குஜராத் அணியை எதிர்த்து களமிறங்கியது.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் உமாங் குமார் 76 ரன்களையும், மனன் 65 ரன்களையும் சேர்த்தார். அதேபோல் தமிழ்நாடு அணி தரப்பில் முகமது 5 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன்பின் களமிறங்கிய தமிழ்நாடு அணி 250 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
119 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, பவுலிங்கில் அசத்திய முகமது அதிரடியாக விளையாடி 85 ரன்களையும், சந்தீப் வாரியர் 38 ரன்களையும் சேர்த்தனர். இதனால் தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸில் 14 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் அணி 312 ரன்களை விளாசியது.
அந்த அணியின் உமாங் குமார் 89 ரன்களையும், ரிப்பல் படேல் 81 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலமாக தமிழ்நாடு அணிக்கு 299 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்பின் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு தொடக்கமே சோதனையாக அமைந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களிலும், கேப்டன் சாய் கிஷோர் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த பாபா இந்திரஜித் 39 ரன்களிலும், பிரதோஷ் ரஞ்சன் 39 ரன்களும், விஜய் சங்கர் 16 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, 168 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த டெய்லண்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. டிரா செய்ய முடியாமல் முதல் போட்டியிலேயே தமிழ்நாடு அணி தோல்வியடைந்தது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications