மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் மக்கள் மனதில் மட்டும் அரசர்களாக இல்லாமல் உண்மையிலேயே ஒரு மாளிகையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
சந்திரமுகி படத்தில் வேட்டையன் ராஜா அரண்மனைக்கு சென்ற வடிவேலு இங்கிருந்து வாசலுக்கு செல்ல வேண்டும் என்றாலே அரை கிலோ மீட்டர் தூரம் இருக்குமே என்று கூறுவார் அல்லவா?

அது போல் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீடுகளும் உள்ளது. இதில் யார் யார் வீடு எவ்வளவு கோடி ரூபாய் மதிப்பு இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் வீரர்கள் வீடுகளிலே அதிக மதிப்புடையது என்றால் அது நம் தல தோனி வீடுதான்.ராஞ்சியில் இருக்கும் தோனியின் இந்த வீடு 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை தோட்டத்தில் இருக்கிறது. இந்த வீட்டில் உள்ளே ஜிம் நீச்சல் குளம் பார்க் கார்களை வைத்துக் கொள்ள ஷோரூம் என அனைத்துமே இருக்கிறது.
இந்த வீட்டுடைய மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனை அடுத்து விராட் கோலியின் வீடு பிரமிக்க வைக்கும் அளவு இருக்கிறது. விராட் கோலி தன் குடும்பத்தினருடன் குரு கிராமில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் வசித்து வந்தார். அதில் நீச்சல் குளம், பார் வசதி என அனைத்துமே இருக்கிறது. பத்தாயிரம் சதுர அடி அளவில் விராட் கோலியின் வீடு இருக்குமாம்.
இது தவிர தனது மனைவியுடன் வசிப்பதற்காக மும்பையில் ஓம்கார் டவர் என்ற கட்டிடத்தில் 35 வது மாடியில் சுமார் 34 கோடி ரூபாய் செலவில் விராட் கோலி ஒரு பிளாட்டை வாங்கி இருக்கிறார். யுவராஜ் சிங்கும் மும்பையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கி இருக்கிறார். அதனுடைய மதிப்பு சுமார் 64 கோடி ரூபாய் ஆகும். இந்த பிளாட்டை 2013 ஆம் ஆண்டு யுவராஜ் வாங்கி இருக்கிறார்.

அதன் பரப்பளவு சுமார் 16,000 சதுர அடி என்ற அளவில் பறந்து விரிந்து இருக்கிறது. விராட் கோலி வாங்கி இருக்கும் அதே கட்டிடத்தில் தான் யுவராஜ்சிங்கும் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர யுவராஜ் சிங் கோவாவிலும் ஒரு வீடு வாங்கி இருக்கிறார். பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் ஒரு பெரிய பங்களாவை வைத்திருக்கிறார். அதில் மூன்று மாடி இரண்டு பேஸ்மெண்ட் மற்றும் ஒரு மொட்டை மாடி என பெரிய அளவிலான மாளிகையில் சச்சின் வசித்து வருகிறார்.
இதன் மதிப்பு சுமார் 38 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. சச்சின் இந்த பங்களாவை வேறொரு குடும்பத்தில் இருந்து வாங்கி அதை இடித்து மாற்றி கட்டியிருக்கிறார். ரோகித் சர்மாவும் மும்பையில் உள்ள அகுஜா டவர்ஸ் என்ற கட்டிடத்தில் 29 வது மாடியை வாங்கி இருக்கிறார்.இதன் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் ஆகும். இந்த வீட்டில் அனைத்துமே தானாக இயங்கக் கூடியவை. நமது குரல் மூலம் விளக்குகளை ஆன் செய்ய முடியும். வீட்டில் உள்ள தட்பவெப்ப நிலை கண்ட்ரோல் செய்ய முடியும். இதேபோன்று வீடு முழுவதும் பாடல்களை கேட்க சிறப்பு வசதியும் செய்யப்பட்டு இருக்கிறதாம்.