சொந்த மண்ணில் அபாரமாக ஆடும் இலங்கையை தோற்கடிப்பது சவாலானது: ரோகித் ஷர்மா
சென்னை: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. ஆகஸ்ட் 12 முதல் டெஸ்ட் போட்டிகள் தொடங்க உள்ளன.

நீண்ட காலம்
இதுகுறித்து பேட்ஸ்மேன், ரோகித் ஷர்மா கூறியதாவது: நீண்ட காலத்துக்கு பிறகு இலங்கைக்கு, இந்திய அணி இப்போதுதான் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. எனவே இந்தியாவுக்கு இது, முக்கியமான தொடர்.

சொந்த மண்
இலங்கை அணி எப்போதுமே தனது சொந்த மண்ணில் சிறப்பாக ஆடும். எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும், இலங்கை நாட்டு பிட்சுகளில் அந்த அணியை தோற்கடிக்க கடினமாக உழைத்தாக வேண்டும். இந்த உண்மையை நானும், இந்திய அணியின் வீரர்கள் அனைவரும், அறிந்து வைத்துள்ளோம்.

கடினமாக இருக்கும்
இது கடினமான, சவாலான தொடராக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எந்த ஒரு சுற்றுப் பயணத்துக்கும் எப்படி தயாராவேனோ அதுபோலத்தான், இந்த டூருக்கும் தயாராகி வருகிறேன். இலங்கை பயணத்துக்காக தனியாக எந்த ஆட்ட நுணுக்கத்தையும் மாற்றவில்லை.

கேப்டன் கோஹ்லி
விராட் கோஹ்லி, டெஸ்ட் அணியை வழி நடத்துகிறார். மற்றொரு கேப்டனிடமிருந்து கேப்டன்ஷிப்பை பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வது எந்த ஒரு கேப்டனுக்கும் மிகவும் கடினமான பணி. கும்ப்ளேயிடமிருந்து டோணி, கேப்டன்ஷிப் பொறுப்பை பெற்றபோது, டோணி தனக்கே உரித்தான ஸ்டைலில் அணியை மாற்றினார். கோஹ்லியும் அதைப்போல செய்வார் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications