ஜாம்பவான் சச்சினின் மெகா சாதனையை தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி.. 15 வயதில் இந்திய அணியில் வரலாறு
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் களம் இறங்கிய 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டுகால சாதனையை முறியடித்து இந்திய அணியின் மிக இளைய சர்வதேச வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில், 15 ஆண்டுகள் மற்றும் 99 நாட்களில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுக வீரராகக் களம் இறங்கினார்.
இதற்கு முன்னதாக 1989-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தனது 16 வயது மற்றும் 205 நாட்களில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரே இந்தியாவின் மிக இளைய சர்வதேச வீரராக இருந்தார். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி-யின் முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற ஒரு நாட்டுக்காக விளையாடும் முதல் 15 வயது வீரர் என்ற உலக சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி செய்தார். இதற்கு முன் அயர்லாந்தின் ஜோஷ் லிட்டில் (16 ஆண்டுகள் 309 நாட்கள்) இந்தச் சாதனையை வைத்திருந்தார்.

இப்போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் நெகிழ்ச்சியான பேச்சுக்குப் பிறகு, திலக் வர்மாவிடமிருந்து வைபவ் சூர்யவன்ஷி தனது அறிமுக தொப்பியைப் பெற்றுக்கொண்டார்.
டாஸின் போது பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "சூர்யவன்ஷி எந்த ஒரு அழுத்தமும் இன்றி விளையாடும் குணம் கொண்டவர். மைதானத்திற்குள்ளும், டிரெசிங் ரூமிலும் அவரிடம் உள்ள முதிர்ச்சி அசாத்தியமானது" என்று பாராட்டினார்.
பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, தனது 12 வயதிலேயே ரஞ்சி கோப்பை தொடரில் அறிமுகமாகி அனைவரையும் வியக்க வைத்தார். கடந்த 2025 ஐபிஎல் தொடரில் தனது 14 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 35 பந்துகளில் சதம் விளாசினார். பின்னர் 2026 அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்து இந்தியாவுக்குக் கோப்பையை வென்று தந்தார்.
பின்னர் 2026 ஐபிஎல் தொடரில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் மற்றும் தொடரின் மதிப்புமிக்க வீரர் விருதுகளையும் வென்று, இப்போதே இந்திய அணியிலும் முத்திரை பதித்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.


Click it and Unblock the Notifications
