சச்சின் 17 வயதில் செய்த POTM சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி.. கனவு நனவானது என நெகிழ்ச்சி
ஹராரே: வைபவ் சூர்யவன்ஷி 15 வயதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டநாயகன் சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார். இது தனக்கு "கனவு நனவான தருணம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
3வது டி20 போட்டியில் 49 பந்துகளில் 81 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, ஆட்டநாயகன் (Player of the Match - POTM) மற்றும் தொடர்நாயகன் (Player of the Series - POTS) ஆகிய இரு விருதுகளையும் தட்டிச் சென்றார். இதன்மூலம், இந்திய ஆண்கள் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை வென்ற மிகக் குறைந்த வயதுடைய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 17 வயதில் தனது முதல் ஆட்டநாயகன் விருதை வென்று இந்திய அளவில் மிக இளம் வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையை செய்து இருந்தார். அந்த சாதனையை 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். ஜிம்பாப்வே டி20 தொடரில் 3 போட்டிகளில் ஆடிய வைபவ், 19 பந்துகளில் அதிவேக அரைசதம் உட்பட 50.33 என்ற பேட்டிங் சராசரியுடன் மொத்தம் 151 ரன்கள் குவித்தார்.
இந்த விருதுகளை வென்ற பிறகு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சர்வதேச அளவில் முதல்முறை ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை வெல்வது எனக்குக் கனவு நனவானது போல் உள்ளது. பயிற்சியாளர், கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் என் மீது முழு நம்பிக்கை வைத்து எனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆட ஊக்கமளித்தனர். பயிற்சி ஆட்டங்களில் என்ன செய்கிறேனோ அதைத் தான் போட்டிகளிலும் செய்ய முயன்றேன். இங்கு ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையில் ஆடிய அனுபவம் எனக்குப் பெரிதும் உதவியது" எனக் கூறினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. வைபவ் சூர்யவன்ஷி 81 ரன்கள் குவித்தார். ரிங்கு சிங் 14 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து இருந்தார். அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி இந்த தொடரை 3-0 என கைப்பற்றி ஜிம்பாப்வேயை அதன் சொந்த மண்ணில் வைட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

