"வைபவ் சூர்யவன்ஷியும், அபிஷேக்கும் இறங்கினால் என்ன செய்றதுன்னே தெரியாது.. ஆனால்".. ஸ்ரீகாந்த் ஆவேசம்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் 11-ல் சேர்க்காமல் பெஞ்சில் அமர வைப்பது அவரது தன்னம்பிக்கையைச் சிதைக்கும் செயல் என்று இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகக் கடுமையாகச் விமர்சித்துள்ளார். கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம் இளம் வீரரை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக சோர்வடையச் செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி ஆடிய போதே 3 - 1 என தொடரை கைப்பற்றி இருந்தது. தொடரை ஏற்கனவே வென்ற பிறகும் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் 11இல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5வது டி20 போட்டியில் வைபவை வெளியே உட்கார வைத்தது குறித்து ஸ்ரீகாந்த் கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளைக் கொடுங்கள். தொடக்க வீரர்களான மூன்று பேரிடமும் வெளிப்படையாகப் பேசுங்கள். நீ 3 போட்டிகளில் ஆடு, மீதமுள்ள 2 போட்டிகளில் மற்றொருவர் ஆடுவார் என தெளிவுபடுத்துங்கள். அதை விட்டுவிட்டு அந்தச் சிறுவனை ஏன் தொடர்ந்து பெஞ்சில் உட்கார வைக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
2026 ஐபிஎல் தொடரில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 776 ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றவர் வைபவ் சூர்யவன்ஷி. நியூசிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியிலும் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசி, பவர்பிளேயில் அபிஷேக் சர்மாவுடன் சேர்ந்து உலக சாதனை படைத்தார்.
வைபவ் சூர்யவன்ஷியை சரியாகப் பயன்படுத்தாததைச் சுட்டிக்காட்டிய ஸ்ரீகாந்த், "அயர்லாந்து தொடரிலும் அவரை ஆட வைக்காமல் சொதப்பினீர்கள். இந்தியா வந்த பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் அவருக்கு வாய்ப்பு தரவில்லை. அந்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சுக்கு எதிராக இந்த வயதில் நான் பேட் பிடித்தால்கூட எளிதாக ரன் குவித்திருப்பேன். அபிஷேக் சர்மாவும் வைபவ் சூர்யவன்ஷியும் களமிறங்கினால் எதிரணிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாது. அதை நியூசிலாந்திலும் பார்த்தோம். அவரை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, அவரது நம்பிக்கையை நிர்வாகம் முற்றிலும் குலைத்து வருகிறது" என்றார்.
மேலும் ஒரு படி மேலே சென்ற ஸ்ரீகாந்த், "வைபவ் சூர்யவன்ஷி ஆடும் அனைத்து போட்டிகளிலும் ரன் குவித்து வருகிறார். அசாத்திய திறமை கொண்ட அவரை உடனடியாக இந்திய ஒருநாள் அணியிலும் சேர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


Click it and Unblock the Notifications

