வைபவ் சூர்யவன்ஷியை டெஸ்ட் அணியில் எடுக்கலாமா? அஜீத் அகர்கர் முன்னிலையில் சச்சின் சொன்ன 'நிபந்தனை'
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவர் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. பிளே-ஆப் சுற்றில் அவர் ஆடிய முதிர்ச்சியான ஆட்டம், அவரை விரைவில் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய டெஸ்ட் அணியில் சேர்ப்பது பற்றிய தனது கருத்தை கூறி இருக்கிறார்.
மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். அப்போது இந்தியத் தேர்வுக்குழுத் தலைவர் அஜீத் அகர்கரும் அங்கிருந்தார். மேடையில் பேசிய சச்சினிடம், வைபவ் சூர்யவன்ஷியை இந்திய டெஸ்ட் அணியில் சேர்ப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

சச்சின் சொன்ன நிபந்தனை
இதற்குப் பதிலளித்த சச்சின், "வைபவ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதைப் பார்க்க எனக்கும் ஆசைதான். ஆனால், அதில் ஒரு நிபந்தனை உள்ளது. அவரை நாம் அவசரப்படுத்தக் கூடாது. அவருக்கு இப்போது தேவையானது ஊக்கமும் ஆதரவுமே தவிர, இந்திய அணியில் எப்போது ஆடுவார் என்ற அழுத்தம் அல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டில் வயது கூடக் கூட அவர் பல சவால்களைச் சந்திக்கக் கற்றுக் கொள்வார். அவருக்கு இப்போது சுதந்திரம் அளிக்க வேண்டும்" என்றார்.
வைபவ்வின் பேட்டிங் குறித்து வியந்து பேசிய சச்சின், "அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் ஆடுகிறார். அவருக்குத் தேவையற்ற ஆலோசனைகளைக் கூறி அவரது இயல்பான ஆட்டத்தைக் குலைக்கக் கூடாது. பந்தைப் பார்த்து அவர் எதிர்வினை ஆற்றும் விதம் அபாரமானது. அந்தத் திறமையில் நாம் குறுக்கிடக் கூடாது. அவர் தனது இயல்பான பாணியிலேயே விளையாட அனுமதிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அஜீத் அகர்கர் முன்னிலையில் இதைப் பேசுவதால் தான் கவனமாகப் பேச வேண்டும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட சச்சின், ஒரு வீரரைத் தேர்வு செய்வது தேர்வாளர்களின் வேலை, நாம் அந்தச் சிறுவனின் ஆட்டத்தை ரசிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மணிக்கட்டு ஆட்டம் அபாரம்
வைபவ் சிக்ஸர் அடிப்பதை விட, அவரது மணிக்கட்டு ஆட்டம் (Wrist work) சச்சினைப் பெரிதும் கவர்ந்துள்ளது. "அவர் வெறும் 'ஸ்லாக்' செய்யும் வீரர் அல்ல. பந்தின் லெந்த்தை முன்கூட்டியே கணித்து ஆடுகளத்தின் எல்லா திசைகளிலும் பந்தை அடிக்கிறார். இது அவரிடம் இருக்கும் தனிச்சிறப்பு" எனப் புகழ்ந்தார்.
16 வயதில் இந்திய அணியில் அறிமுகமான சச்சின், அதே போன்ற ஒரு திறமையை வைபவ்விடம் காண்பதாகத் தெரிவித்தார். அடுத்த மாதம் இலங்கை செல்லும் 'இந்தியா ஏ' அணியில் வைபவ் இடம் பெற்றுள்ளார். மேலும் செப்டம்பர் மாதம் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான உத்தேசப் பட்டியலிலும் அவரது பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அவர் களமிறங்கினால், இந்தியாவிற்காக அறிமுகமாகும் மிக இளம் வயது வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.


Click it and Unblock the Notifications
