வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்கலைனா.. பயந்துபோய் சாம்சனை நீக்கினார்.. கம்பீரை விளாசிய பத்ரிநாத்
சென்னை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்றால் ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கும் என்று பயந்தே சஞ்சு சாம்சனை அணியிலிருந்து நீக்கிவிட்டு வைபவுக்கு வாய்ப்பு அளித்தார் என்று முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் குற்றம் சாட்டியுள்ளார். சில மாதங்கள் முன் நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சாம்சனை அணியிலிருந்து நீக்கிய பிறகு பல இரவுகள் தூக்கமின்றித் தவித்ததாகவும், தனது பயிற்சியாளர் வாழ்க்கையிலேயே அதுதான் மிகவும் கடினமான முடிவு என்றும் கம்பீர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பேசிய முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பத்ரிநாத் பேசுகையில், "சஞ்சு சாம்சனை நீக்கிய பிறகு தூங்க முடியாமல் தவித்ததாக கவுதம் கம்பீர் தெரிவித்தார். ஐபிஎல் தொடருக்குப் பிறகு வைபவ் சூர்யவன்ஷிக்கு ஊடகங்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் விளம்பரமும் எதிர்பார்ப்பும் உருவானது. இத்தகைய அதீத எதிர்பார்ப்பு எழும் போது, எந்தப் பயிற்சியாளராக இருந்தாலும் அவர்களின் மீது ஒருவித அழுத்தம் ஏற்படுவது வழக்கம்.

அந்த ஊடக அழுத்தத்தின் காரணமாகவே கம்பீர் இந்த முடிவை எடுத்தார். எனவே இது கிரிக்கெட் சார்ந்த தொழில்முறை முடிவே கிடையாது. கிரிக்கெட்டைத் தாண்டிய வெளி அழுத்தங்களால்தான் சஞ்சு சாம்சன் அந்தத் தொடரில் ஓரங்கட்டப்பட்டார்" என்று பத்ரிநாத் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகளுக்குப் பின் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டாலும், பின்னர் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து தொடக்க வீரராக 4 போட்டிகளில் களமிறங்கினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாம்சன், வைபவ் இருவரும் ஆடும் லெவனில் இடம்பெற்றனர்.
இந்த நிலையில் லக்னோவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் தொடங்கும் வேளையில், தொடக்க வீரர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இடையே மீண்டும் கடும் போட்டி எழுந்துள்ளது. இருவரில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்ற முடிவை பயிற்சியாளர் கம்பீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications


