வைபவ் சூரியவன்ஷியால் ரோஹித்துக்கு சிக்கல்.. இரண்டு போட்டிகளில் சொதப்பினால்இடம் காலி.. ஸ்வான் கருத்து
மும்பை: 15 வயது இளம் புயல் வைபவ் சூரியவன்ஷியின் அசுர வளர்ச்சியால், இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவுக்கு அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் பெரும் சவால் காத்துக்கொண்டிருப்பதாக இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் எச்சரித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்று, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். 2027 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் அவர்கள் இருந்தாலும், வயது மற்றும் ஃபார்ம் காரணமாக ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து அசத்திய 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, அயர்லாந்து தொடரில் அறிமுகமாக உள்ளார். இதனால், ரோஹித் சர்மாவுக்கு அணியில் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கிரேம் ஸ்வான் பேசுகையில், "கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் இருக்கும் எந்தவொரு வீரருக்கும் மாற்று வீரரைத் தேடுவது இயல்பான ஒன்றுதான். அடுத்த விராட் கோலி யார், அடுத்த ரோஹித் சர்மா யார் என்று மக்கள் எப்போதும் தேடிக்கொண்டே இருப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் ரோஹித் சொதப்பினால் போதும், அவருக்குப் பின்னால் இருக்கும் சூரியவன்ஷி போன்ற இளம் வீரர்களை நோக்கி அனைவரும் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இதனால் அடுத்த 6 வாரங்கள் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் முக்கியமானது" என்றார்.
மேலும், "ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா சிறந்த ஃபார்மிலேயே காணப்பட்டார். வரும் ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அங்கு ஜூலை மாதம் வானிலையில் வெள்ளைப்பந்து பேட்டிங் செய்ய எளிதாக இருக்கும். எனவே தனது இடத்தை நிரூபிக்க துடிக்கும் ரோஹித் சர்மாவுக்கு எதிராக பந்துவீச இங்கிலாந்து பவுலர்கள் விரும்ப மாட்டார்கள். இந்த சவால் ரோஹித்தை மேலும் ஆபத்தான பேட்ஸ்மேனாக மாற்றும்" என்று ஸ்வான் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
