சென்னை: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிஸ்டரி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்நிலையில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை விட வருண் சக்கரவர்த்தி தான் தற்போது இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார் என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக் குழு முன்னாள் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பையில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 6.88 ஆகவும், எகானமி ரேட் 5.16 ஆகவும் உள்ளது. குறிப்பாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய அவர், வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் இணைந்து விளையாடிய கடந்த 21 போட்டிகளை ஒப்பிட்டுப் பார்த்தால், வருண் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதே சமயம் பும்ரா 22 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். இதனைச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீகாந்த், வருண் சக்கரவர்த்திக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு குறித்து ஸ்ரீகாந்த் தனது யூடியூப் தளத்தில் பேசியதாவது, "வருணின் பந்துவீச்சை பேட்டர்களால் இன்னும் சரியாகக் கணிக்க முடியவில்லை. பந்து எப்போது நேராக வரும், எப்போது கூக்ளி ஆகும், எப்போது வேகம் மாறும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஒரே சீரான வேகத்தில் வீசாமல், திடீர் திடீரென வேகத்தை மாற்றுவது பேட்டர்களுக்கு பெரும் குழப்பத்தை உண்டாக்குகிறது.
அவர் வீசும் பந்துகள் பெரும்பாலும் ஆஃப் ஸ்டம்ப் மற்றும் மிடில் ஸ்டம்ப் பகுதியிலேயே குத்துகின்றன. வலது கை பேட்டர்களுக்கு எதிராக பந்தை லேசாக உள்ளே கொண்டு வந்து பிறகு திருப்புகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜஸ்பிரித் பும்ராவைக் கண்டு உலகத்தரம் வாய்ந்த பேட்டர்கள் எப்படித் தடுமாறினார்களோ, அதே போன்ற ஒரு நிலையைத் தான் இப்போது வருண் சக்கரவர்த்தி ஏற்படுத்தியுள்ளார்" என்று பாராட்டியுள்ளார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே அதிரடியாக ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றார். இருப்பினும், அந்த விருதுக்கு வருண் சக்கரவர்த்தியும் ஒரு வலுவான போட்டியாளர் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். டாப் ஆர்டர் பேட்டர்களை வரிசையாக அவுட் செய்தும், வருண் குறித்து யாரும் பெரிதாகப் பேசவில்லை என்பது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்திய அணி இந்த உலகக்கோப்பையை வென்றால், வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருதைப் பெற அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு, ரன்களையும் கட்டுப்படுத்துகிறார். ஒரு சுழற்பந்து வீச்சாளர் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்தாலே அது டி20 கிரிக்கெட்டில் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான். ஆனால் வருண் அதற்கும் குறைவாகவே ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை அள்ளுகிறார்" என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் வருண் சக்கரவர்த்தியைப் புகழ்வதாக யாரும் நினைக்க வேண்டாம் என்று கூறிய ஸ்ரீகாந்த், அவரது அசாத்திய திறமைக்காகவே அவரை 'நவீன கால டி20 ஜாம்பவான்' என்று அழைப்பதாகத் தெரிவித்தார். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் மட்டும் 27 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை வருண் வீழ்த்தியுள்ளார்.
இந்த அசத்தலான ஆட்டத்தை அவர் வரும் போட்டிகளிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி தனது அடுத்த சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியிலும் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு இந்திய அணியின் முக்கிய வியூகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.