மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல் நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். முதலில் அவருக்கு சிறுநீர் தொற்று மற்றும் வயிற்று வலி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவரை பரிசோதித்துப் பார்த்த நிலையில் மூளையில் ரத்தக்கட்டிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர் உடல் நிலை மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. 52 வயதாகவும் வினோத் காம்ப்ளி கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். இந்திய அணியில் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற எண்ணம் அவருக்கு உள்ளது.

அதன் காரணமாக அவர் போதை மற்றும் மதுவுக்கு அடிமையானார். அதனால் அவரது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக அவர் அதிலிருந்து மீண்டு வருவதற்காகவும், அதனால் ஏற்பட்ட உடல் நல பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.
எனினும், அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு செல்கிறது. இந்த நிலையில் தான் அவருக்கு மூளையில் ரத்தக் கட்டிகள் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஆக்ருதி மருத்துவமனையின் மருத்துவர் விவேக் திரிவேதி கூறி இருக்கிறார். அவருக்கு இந்த மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
சமீபத்தில் வினோத் காம்ப்ளி ஒரு நிகழ்ச்சியில் அவரது பால்ய கால நண்பரான சச்சின் டெண்டுல்கரை சந்தித்து இருந்தார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. அப்போது வினோத் காம்ப்ளி மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார். அவர் ஒரு நிதானத்தில் இல்லை.
அவரது உடல் நிலை மோசமாக இருப்பதும் அவர் நிதானமான மனநிலையில் இல்லாமல் இருப்பதும் அந்த வீடியோக்கள் மூலமாக வெளி உலகுக்கு தெரியவந்தது. இதை அடுத்து 1983 உலகக் கோப்பை வென்ற முன்னாள் வீரர்களான கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் அவருக்கு உதவ தயாராக இருப்பதாக கூறி இருந்தனர். அவர்களது உதவியை ஏற்க உள்ளதாக வினோத் காம்ப்ளி கூறி இருந்தார். இந்த நிலையில் தான் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்துள்ளது.